இந்திய அணியின் சிறந்த கேப்டன் யார்? - வைரலாகும் ஷமியின் பதில்!

Updated: Thu, Feb 08 2024 13:46 IST
Image Source: Google

இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. இவர் இந்திய அணிக்காக இதுவரை 64 டெஸ்ட், 101 ஒருநாள் மற்றும் 23 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 448 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் வெறும் 7 போட்டிகளில் மட்டுமே விளையாடிய முகமது ஷமி 24 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அதில் மூன்று 5 விக்கெட் ஹாலும் அடங்கும்.

இதையடுத்து காயம் காரணமாக அவர் உலகக்கோப்பை தொடருக்கு பின் எந்தவொரு போட்டிகளிலும் பங்கேற்காமல் இருந்த வருகிறார். குறிப்பாக இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் முகமது ஷமி விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இத்தொடரிலிருந்தும் அவர் விலகியுள்ளார். இதனைத்தொடர்ந்து வரவுள்ள ஐபிஎல் தொடரில் முகமது ஷமி கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்திய அணியின் சிறந்த கேப்டன் யார்? என்ற கேள்விக்கு முகமது ஷமி பதிலளித்துள்ளார். அந்த கேள்விக்கு பதிலளித்து பேசிய ஷமி, “இந்திய அணிக்கு பல வெற்றிகளை தேடிதந்த மகேந்திர சிங் தோனி தான் சிறந்த கேப்டன். ஒப்பீட்டின் அளவில் சிறந்த கேப்டன் யார் என்பதற்கு பதில் சொல்ல முடியாது. ஆனால், அதிக கோப்பைகளை வென்றவர் என்ற அடிப்படையில் தோனிதான் சிறந்தவர்” என தெரிவித்துள்ளார்.

 

ஏனெனில் எம்எஸ் தோனியின் தலைமையின் கீழ் அறிமுகமான முகமது ஷமி, விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரது கேப்டன்சியின் கீழ் சிறப்பாக செயல்பட்டு அசத்தியுள்ளார். இதன் காரணமாகவே அவர் ஒப்பீட்டின் அடிப்படையில் அல்லாமல் கோப்பைகள் வென்ற அடிப்படையில் எம்எஸ் தோனியை சிறந்த கேப்டனாக தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

முன்னதாக விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரில் யார் சிறந்த வீரர் என்ற கேள்விக்கான பதிலை முகமது ஷமி கூறியிருந்தார். அந்த பதிலில், விராட் கோலியை உலகின் சிறந்த பேட்ஸ்மேனாகவும், ரோஹித் சர்மாவை மிகவும் அபாயகரமான பேட்ஸ்மேன் என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை