எங்களை குறை சொல்லும் முன் உங்கள் வரலாற்றை திரும்பி பாருங்கள் - இன்ஸாமாம் கருத்துக்கு முகமது ஷமி பதிலடி!
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டிஸில் நடைபெற்று முடிந்த ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது. ஆனால் அதேசமயம் இந்திய அணி மீது பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்ஸாமாம் உல் ஹக் பந்தை சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டை முன்வைத்தது சர்வதேச கிரிக்கெட்டில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
அதன்படி இந்திய அணி சூப்பர் 8 சுற்றில் ஆஸ்திரேலிய அணியை 24 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியதுடன், அந்த அணியை தொடரிலிருந்தும் வெளியேற்றியது. அந்த போட்டியில் இந்திய அணி வீரர்கள் பந்தை சேதப்படுத்தியுள்ளதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் இன்ஸாமாம் உல் ஹக் குற்றச்சாட்டை முன்வைத்தது பெரும் பரபரப்பை கிளப்பினார்.
ஆனால் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா உள்பட பல்வேறு தரப்பினரும் இன்ஸாமாம் உல் ஹக்கின் கருத்துக்கு மறுப்பு தெரிவித்தனர். இந்நிலையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியும் தனது கருத்தை தெரிவித்துள்ளது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதன்படி இதுகுறித்து பேசிய முகமது ஷமி, “கடந்த 2023 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையின் போது பந்தில் நான் பந்தை சேதப்படுத்தியதாக இன்ஸாமாம் உல் ஹக் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில் அவர் சமீபத்தில் அர்ஷ்தீப் சிங் மீது மற்றொரு முட்டாள்தனமான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். நான் இன்சமாம்-உல்-ஹக்கை மிகவும் மதிக்கிறேன், அவரிடமிருந்து இதுபோன்ற அறிக்கைகளை யாரும் எதிர்பார்க்கவில்லை. அவர்கள்தான் இந்த ரிவர்ஸ் ஸ்விங்கை ஆரம்பித்து வைத்தவர்கள், அதைச் மற்றவர்கள் செய்யும்போது அவர்களுக்குப் என்ன பிரச்சனை உள்ளது என்பது தான் எனக்கு புரியவில்லை.
இந்திய பந்துவீச்சாளர்களிடம் எதையும் கூறுவதற்கு முன், பந்தை சேதப்படுத்தியதில் தங்கள் வீரர்கள் சிக்கிய முந்தைய சம்பவங்களை அவர்கள் நினைவில் வைத்து பேச வேண்டும் என நினைக்கிறேன். பாகிஸ்தான் வீரர்கள் தங்கள் அணி சிறப்பாக செயல்படாதபோது பொதுமக்களை முட்டாளாக்கி குற்றச்சாட்டுகளை முன்வைக்க விரும்புகிறார்கள். ஒருவேளை ரிவர்ஸ் ஸ்விங்கில் நாங்கள் ஏமாற்று வேலை செய்வதாகச் சொன்னால் அதை அறிமுகப்படுத்திய அவர்கள் தான் முதலில் ஏமாற்றியிருக்க வேண்டும்
Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy
ஒருவேளை நான் அடுத்த ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான பாகிஸ்தானுக்குச் சென்றால், மூன்று பந்துகளை என்னுடன் எடுத்துச்செல்வேன். அதனை நான் 20 பேர் முன்னிலையில் பந்துகளை இரண்டு துண்டுகளாக வெட்டுவதுடன், பந்தில் எந்த சாதனத்தையும் நான் வைத்திருக்க வில்லை என்பதை உறுதி செய்த பின்னரே பந்துவீச்சை தொடர்வேன். அத்துடன் ரிவர்ஸ் ஸ்விங் எப்படி வருகிறது என்பதையும் அவர்களுக்கு செய்து காட்டுவேன்” என்று பதிலடியைக் கொடுத்துள்ளார்.