நான் ஏன் அணியிலிருந்து நீக்கப்பட்டேன் என்பதை தோனியிடம் நிச்சயம் கேட்பேன் - மனோஜ் திவாரி!

Updated: Tue, Feb 20 2024 12:41 IST
நான் ஏன் அணியிலிருந்து நீக்கப்பட்டேன் என்பதை தோனியிடம் நிச்சயம் கேட்பேன் - மனோஜ் திவாரி! (Image Source: Google)

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரராக அறியப்படுபவர் மனோஜ் திவரி.  இவர் 2008 முதல் 2015 ஆம் ஆண்டு வரை இந்திய அணிக்காக 12 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் ஒரு சதம், ஒரு அரைசதம் என 302 ரன்களை எடுத்துள்ளார்.  அதன்பின் அரசியலில் நுழைந்ததுடன், மம்தா பானர்ஜின் அமைச்சரவையில் விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அமைச்சராகவும் செயல்பட்டுவந்தார்.

அரசியலில் இருந்தபோதிலும் கிரிக்கெட் போட்டிகளில் கவனம் செலுத்தி விளையாடி வந்தார். 2022-2023 ஆம் ஆண்டுக்கான உள்ளூர் போட்டிகளில் மேற்கு வங்கத்துக்காக விளையாடி அந்த அணியை இறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்றார். அதேபோல் இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ்(டெல்லி கேப்பிட்டல்ஸ்) மற்றும் ரைஸிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் போன்ற அணிகளுக்காக விளையாடியுள்ளார்.

கடந்த 2012 ஆம் ஆண்டு ஐபிஎல் கோப்பையை வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் மனோஜ் திவாரி இடம் பெற்று கடைசி ஓவரில் வெற்றிக்குத் தேவையான ரன்களை அடித்தது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் தொடரில் இதுவரை 98 போட்டிகளில் விளையாடியுள்ள மனோஜ் திவாரி 7 அரைசதங்களுடன், 1,695 ரன்களையும் சேர்த்துள்ளார். இந்நிலையில் தான் தொடர்ச்சியான காயங்களை சந்தித்த அவர், இந்திய அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டார். 

இருப்பினும் அதன்பின் பெங்கால் கிரிக்கெட் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் அவர், நடப்பாண்டு ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரிலும் அணியை வழிநடத்தினார். இந்நிலையில், நடப்பாண்டு ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் பீகார் அணிக்கெதிரான போட்டியுடன் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து மனோஜ் திவாரி ஓய்வு பெற்றுள்ளார். அதன்படி தனது கடைசி போட்டியில் விளையாடிய அவருக்கு வீரர்கள் மற்றும் நடுவர்கள் என அனவரும் தங்களது வாழ்த்தை தெரிவித்தனர்.

 

இந்நிலையில் தனது ஓய்வுபின் மனோஜ் திவாரி எழுப்பியுள்ள குற்றச்சாட்டுகள் இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய மனோஜ் திவாரி, “நான் 65 முதல் தர போட்டிகளில் விளையாடி முடித்தபோது, ​​எனது பேட்டிங் சராசரி 65ஆக இருந்தது. அப்போது ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்திருந்தது, சென்னையில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பயிற்சி போட்டியில் நான் 130 ரன்கள் எடுத்திருந்தேன். அதன்பின் இங்கிலாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்திலும் 93 ரன்கள் எடுத்தேன். இதனால் அப்போது டெஸ்ட் போட்டியில் விளையாடும் வாய்ப்பு எனக்கு கிடைக்கும் என நம்பிக்கையுடன் இருந்தேன்.

ஆனால் அப்போது எனக்கு பதிலாக யுவராஜ் சிங்கை தேர்வு செய்தார்கள். சதம் அடித்ததற்காக ஆட்ட நாயகன் விருது பெற்றபோதும் கூட நான் இந்திய அணியிலிருந்து புறக்கணிக்கப்பட்டேன். அதிலும் ஒருமுறை இரண்டுமுறை அல்ல தொடர்ச்சியாக 14 முறை நான் இந்திய அணியிலிருந்து புறக்கணிக்கப்பட்டேன். ஒரு வீரருக்கு தன்னம்பிக்கை உச்சத்தில் இருக்கும்போது யாரோ ஒருவர் அதை அழித்துவிடுகிறார் என்றால், அதற்குபிறகு அந்த வீரரின் உழைப்பும் வாய்ப்பும் அங்கேயே முடிந்துவிடுகிறார்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "கடந்த 2011ஆம் ஆண்டு நான் சதமடித்த பிறகும் என்னை அணியிலிருந்து நீக்கினார்கள். 'ஏன் இப்படிச் செய்தீர்கள்' என தோனியிடம் கேட்க விரும்புகிறேன். மேலும் அப்போது ரோஹித், விராட் கோலியை போல பெரிய ஹீரோவாகும் அளவுக்கான திறமை என்னிடம் இருந்தது. ஆனால், என்னால் ஹீரோவாக முடியவில்லை. இப்போது நிறைய வீரர்களுக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கின்றன. அதை தொலைக்காட்சியில் பார்க்கையில் எனக்கு வருத்தமாக இருக்கிறது" என கூறியிருக்கிறார். இந்நிலையில் மனோஜ் திவாரியின் இந்த குற்றச்சாட்டுகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை