இன்று நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 234 ரன்களைக் குவித்தது. அதன்படி அந்த அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா - இஷான் கிஷான் ஆகியோர் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். 

Advertisement

இருவரது அதிரடியான ஆட்டத்தின் காரணமாக அந்த அணி 6 ஓவர்களில் 75 ரன்களை குவித்தது. இதில் ரோஹித் சர்மா 49 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் ரன்கள் ஏதுமின்றியும், இஷான் கிஷன் 42 ரன்களுக்கும், திலக் வர்மா 6 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். அதன்பின் இணைந்த கெப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் டிம் டேவிட் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். 

Advertisement

இதில் ஹர்திக் பண்டியா 39 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தாலும் டிம் டேவிட் 45 ரன்களை குவித்தார். அதிலும் அவருக்கு துணையாக விளையாடிய ரொமாரியோ செஃபெர்ட் 10 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 3 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 39 ரன்களை குவித்து அணிக்கு ஃபினிஷிங்கை கொடுத்தார். இதன்மூலம் அந்த அணி 234 ரன்களை குவித்தது. டெல்லி அணி தரப்பில் ஆண்ட்ரிச் நோர்ட்ஜே, அக்ஸர் படேல் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

இதையடுத்து களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் டேவிட் வார்னர் 10 ரன்களுக்கு விக்கெட்டை இழந்து ஏமாற்றமளிக்க, பிரித்வி ஷா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்து அசத்தினார். பின் 66 ரன்களில் பிரித்வி ஷா தனது விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து அபிஷேக் போரல் 41 ரன்களிலும், ரிஷப் பந்த், அஸ்கர் படேல், லலித் யாதவ், குமார் குஷாரா, ஜெய் ரிச்சர்ட்சன் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர். 

இருப்பினும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் வெற்றிக்காக இறுதிவரை போராடிய டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 3 பவுண்டரி, 7 சிக்சர்கள் என 71 ரன்களைச் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை வீழ்த்தி நடப்பு சீசனில் தங்களது முதல் வெற்றியைப் பதிவுசெய்தது. 

 

Advertisement

இந்நிலையில் இப்போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம், டி20 கிரிக்கெட் வரலாற்றில் 150 வெற்றிகளை குவித்த முதல் அணி எனும் சாதனையை மும்பை இந்தியன்ஸ் அணி படைத்துள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 148 வெற்றிகளுடன் இரண்டாம் இடத்திலும், சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணி 140 வெற்றிகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News