ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 9ஆவது சீசன் வெஸ்ட் இண்டிஸ் மற்றும் அமெரிக்காவில் கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது. இத்தொடரின் இறுதிப்போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது 7 ரன்கள் வித்தியாசத்தில் ஐடன் மார்க்ரம் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது. கிட்டத்திட்ட 17 வருடத்திற்குப் பிறகு டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி இன்று காலை இந்தியா வந்தடைந்தது.
அதன்படி முதலில் டெல்லி விமான நிலையம் வந்தடைந்த இந்திய அணி வீரர்களுக்கு விமான நிலையத்தில் ரசிகர்கள் உற்சாக வரவேற்பை வழங்கினர். அதன்பின் டெல்லியில் இந்திய அணி பிரதமரை சந்தித்த வீரர்கள் அவரிடம் வாழ்த்து பெற்ற பின், டெல்லியில் இருந்து விமானம் மூலம் மும்பை வந்தடைந்தனர். மேலும் மும்பையில் இந்திய அணிக்கு பிசிசிஐ தரப்பில் வெற்றி ஊர்வலமும் நடத்தப்பட்டது.
லட்சக்கணக்கான ரசிகர்களுக்கு மத்தியில் மும்பை நரிமண் முனையில் இருந்து வான்கடே கிரிக்கெட் மைதானம் வரை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு பிரம்மாண்ட பேரணியும் நடத்தப்பட்டது. இதில் கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்களுடன், அணியின் பயிற்சியாளர்கள், பிசிசிஐ உறுப்பினர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர். மேற்கொண்டு மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் வீரர்களுக்கான பாராட்டு விழாவும் நடத்தப்பட்டது.
இந்த விழாவில் இந்திய அணிக்கு பிசிசிஐ தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்த ரூ.125 கோடிக்கான காசோலையை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா வீரர்களிடம் வழங்கினார். இந்நிலையில் இந்த விழாவின் போது பேசிய இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவிடாம் ஓய்வு முடிபற்றி கேட்கபட்டது. அதற்கு பதிலளித்த பும்ரா, “எனது ஓய்வுக்கு மிக நீண்ட தூரம் உள்ளது. ஏனெனில் நான் இப்போது தான் ஆரம்பித்துள்ளேன்” என தெரிவித்துள்ளார்.
நடந்த முடிந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்தியதுடன், இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வெல்வதற்கும் துருப்புச்சீட்டாக இருந்தார். இதன் காரணமாக டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் தொடர் நாயகன் விருதையும் வென்றுள்ளார். மேற்கொண்டு, இந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் 8 போட்டிகளில் விளையாடிய பும்ரா, 4.17 என்ற எக்கனாமியில் 15 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.