ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளே இறுதிப்போட்டிக்கு முன்னேறும் - நாதன் லையன் கணிப்பு!

Updated: Thu, May 30 2024 14:48 IST
Image Source: Google

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது வரும் ஜூன் மாதம் முதல் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் கோலாகலமாக தொடங்கவுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைக்கும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.

இதனைத்தொடர்ந்து இத்தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் பயிற்சி ஆட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் எந்த நான்கு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும், எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற கணிப்புகளை முன்னாள் வீரர்கள் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடும் என ஆஸ்திரேலிய வீரர் நாதன் லையன் கருத்து தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசியுள்ள அவர், “நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா நிச்சயமாக இருக்கும், ஏனென்றால் அது எங்களுடைய அணி. அதனால் நான் கொஞ்சம் பாரபட்சமாக தான் இருக்கிறேன் என்பது தெரியும். அதேசமயம் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் மற்றொரு அணியாக நான் பாகிஸ்தானை பார்க்கிறேன். ஏனெனில் அவர்களிடம் தரமான சுழற்பந்து வீச்சாளர்கள் இருப்பதுடன் பாபர் ஆசாம் போன்ற பேட்டர்களும் உள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.

நாதன் லையனின் இந்த கணிப்பு எவ்வளவு உண்மை என்பதை காலம் தான் சொல்லும், ஆனால் தற்போது சமூக வலைதளங்களில் நாதன் லையனி இந்த கருத்தை ஏற்காத ரசிகர்கள் அவரை ட்ரோல் செய்து வருகின்றனர். அதேசமயம் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி இறுதிப் போட்டிக்கு செல்லும் என்பதை நாதன் லையன் கூறவில்லை என்றாலும், பெரும்பாலான முன்னாள் ஜாம்பவான்கள் இந்திய அணியை இறுதிப்போட்டிக்கு முன்னேறும் முதல் தேர்வாக வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை