IND vs AUS, 2nd Test: நாதன் லையன் சுழலில் திணறிய இந்தியா; காப்பாற்றுவாரா விராட் கோலி?
இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெறும் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரான பார்டர் கவாஸ்கர் கோப்பையின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.
இந்நிலையில், நேற்று தொடங்கிய இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியா அணி டாசில் வென்று முதலில் பேட்டிங் செய்தது. இதில் தொடக்க வீரர் உஸ்மான் கவஜா 81 ரன்களையும், ஹோன்ட்ஸ்கோம் 72 ரன்கள் எடுக்க அந்த அணி 263 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் முகமது ஷமி நான்கு விக்கெட்டுகள் கைப்பற்றினார் .
இதை அடுத்து நேற்று முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி ஆட்டநேர முடிவில் விக்கெட் ஏதும் இழக்காமல் 21 ரன்களை எடுத்து இருந்தது. இந்த நிலையில் இன்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இரண்டாம் நாள் ஆட்டத்தில் முதல் ஸ்பெல்லில் சீராக விளையாடிய இந்திய தொடக்க ஜோடி, இரண்டாவது ஸ்பெல்லில் நாதன் லயன் வர தடுமாறியது. இன்னொரு முனையில் ஆஸ்திரேலிய அணி இரண்டு ரிவ்யூவை வீணாக்கியது.
இந்த நேரத்தில் கே எல் ராகுலை 17 ரன்களில் எல்பி டபிள்யு முறையில் லயன் வெளியேற்ற, அடுத்து 32 ரன்களைச் சேர்த்து அரைசதம் நோக்கி நகர்ந்த ரோஹித் சர்மாவை போல்ட் ஆக்கினார். தொடர்ந்து நூறாவது டெஸ்டில் விளையாடும் புஜாராவை ரன் ஏதும் எடுக்க விடாமல் காலி செய்தார் லையன்.
இதையடுத்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் 4 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஹாண்ட்ஸ்கோம்பின் அபாரமான கேட்சின் மூலம் விக்கெட்டை இழந்தார். இதனால் 66 ரன்களில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதையடுத்து ஜோடி சேர்ந்த விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்ப்பை தடுத்தனர்.
இதனால் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 88 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் விராட் கோலி 14 ரன்களுடனும், ரவீந்திர ஜடேஜா 15 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலிய தரப்பில் நாதன் லையன் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார் .