NZ vs AUS, 1st Test: கேமரூன் க்ரீன் சதத்தால் தப்பிய ஆஸி; பந்துவீச்சில் அசத்திய நியூசிலாந்து!
ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டில் வெலிங்டனில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து ஆஸ்திரேலிய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு ஸ்டீவ் ஸ்மித் - உஸ்மான் கவாஜா இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் இருவரும் இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் 61 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். அதன்பின் இருவரும் அரைசதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஸ்டீவ் ஸ்மித் 31 ரன்களிலும், உஸ்மான் கவாஜா 33 ரன்களிலும் என அடுத்தடுத்டு மேட் ஹன்றி பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய மார்னஸ் லபுஷாக்னே, டிராவிஸ் ஹெட் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர்.
பின்னர் ஜோடி சேர்ந்த கேமரூன் க்ரீன் - மிட்செல் மார்ஷ் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் அதிரடியாக விளையாட முயற்சித்த மிட்செல் மார்ஷ் 6 பவுண்டரி, ஒரு சிக்சர் என 40 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய அலெக்ஸ் கேரி, மிட்செல் ஸ்டார்க், கேப்டன் பாட் கம்மின்ஸ், நாதன் லையன் என களமிறங்கிய வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதேசமயம் மறுபக்கம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேமரூன் க்ரீன் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 2ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதன்மூலம் முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 279 ரன்களைச் சேர்த்துள்ளது. நியூசிலாந்து அணி தரப்பில் மேட் ஹென்றி 4 விக்கெட்டுகளையும், வில்லியம் ஓ ரூர்க், ஸ்காட் குகெலீஜ்ன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர்.