NZ vs ENG, 3rd Test: நியூசிலாந்து 347 ரன்களுக்கு ஆல் அவுட்; இங்கிலாந்து தடுமாற்றம்!
நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நேற்று (டிசம்பர் 14) தேதி ஹாமில்டனில் உள்ள செடான் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு கேப்டன் டம் லேதம் மற்றும் வில் யங் இணை தொடக்கம் கொடுத்தர்.
இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட வில் யங் 43 ரன்னில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதம் கடந்து விளையாடி வந்த டாம் லேதமும் 63 ரன்னில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் களமிறங்கிய கேன் வில்லியம்சன் ஒருபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், மறுமுனையில் களமிறங்கிய ரச்சின் ரவீந்திரா 18 ரன்னில் ஆட்டமிழந்தார். பின்னர் 44 ரன்னில் கேன் வில்லியம்சனும் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய டேரில் மிட்செல், டாம் பிளெண்டல், கிளென் பிலீப்ஸ், மேட் ஹென்றி உள்ளிட்டோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
பின்னர் ஜோடி சேர்ந்த மிட்செல் சான்ட்னர் - டிம் சௌதீ இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் டிம் சௌதீ ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 23 ரன்னில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் மிட்செல் சான்ட்னர் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். இதன்மூலம் முதல்நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்து 315 ரன்களைச் சேர்த்தது. இதையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை மிட்செல் சான்ட்னர் 50 ரன்களுடனும், வில்லியம் ஓ ரூர்க் ரன்கள் ஏதுமின்றியும் இன்னிங்ஸைத் தொடர்ந்தனர்.
இதில் அதிரடியாக விளையாடிய மிட்செல் சான்ட்னர் 10 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 76 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். இதனால் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 347 ரன்களை குவித்த நிலையில் ஆல் அவுட்டானது. இங்கிலாந்து அணி தரப்பில் மேத்யூ பாட்ஸ் 4 விக்கெட்டுகளையும், கஸ் அட்கின்சன் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு ஸாக் கிரௌலி மற்றும் பென் டக்கெட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அதிரடியாக தொடங்கிய கிரௌலி 21 ரன்களை எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.
Also Read: Funding To Save Test Cricket
அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான பென் டக்கெட்டும் 11 ரன்களை மட்டுமே சேர்த்த கையோடு பெவிலியன் திரும்பினார். பின்னர் ஜோடி சேர்ந்த ஜேக்கப் பெத்தெல் - ஜோ ரூட் இணை அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினர். இதன்மூலம் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகள் இழ்ப்பிற்கு 54 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் ஜேக்கப் பெத்தெல் 7 ரன்களுடனும், ஜோ ரூட் 15 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்றி 2 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.