தென் ஆப்பிரிக்க அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணியில் டெவான் கான்வே ஒரு ரன்னிலும், டாம் லேதம் 20 ரன்களிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர்.
அதன்பின் இணைந்த கேன் வில்லியம்சன் - ரச்சின் ரவீந்திரா இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் கேன் வில்லியம்சன் தனது 30ஆவது சர்வதேச டெஸ்ட் சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அவரைத்தொடர்ந்து மறுபக்கம் ரச்சின் ரவீந்திராவும் தனது சதத்தைப் பதிவுசெய்திருந்தார். இதன்மூலம் முதல்நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்களை எடுத்திருந்தது.
இதையடுத்து இன்று தொடங்கிய 3ஆம் நாள் ஆட்டத்தை கேன் வில்லியம்சன் 112 ரன்களுடனும், ரச்சின் ரவீந்திரா 118 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் கேன் வில்லியம்சன் 118 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய டெரில் மிட்செல் 34 ரன்களிலும், டாம் பிளெண்டல் 11 ரன்களிலும், கிளென் பிலீப்ஸ் 39 ரன்களிலும் என விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
இதற்கிடையில் மறுபக்கம் அபார ஆட்டத்தை வெலிப்படுத்தி வந்த ரச்சின் ரவீந்திரா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் இரட்டை சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இப்போட்டியில் அவர் 26 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 240 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 511 ரன்களை எடுத்து ஆல் அவுட்டானது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் கேப்டன் நெய்ல் பிராண்ட் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் எட்வர்ட் மூர் - கேப்டன் நெய்ல் பிராண்ட் ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். இதில் நெய்ல் பிராண்ட் 4 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ரேனார்ட் வான் டோண்டர் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். இவர்களைத் தொடர்ந்து எர்ட்வர்ட் மூர் 23 ரன்களுக்கும், ஹம்ஸா 22 ரன்களுக்கும் என ஆட்டமிழந்தனர்.
அதன்பின் இணைந்த டேவிட் பெட்டிங்ஹாம் - கீகன் பீட்டர்சென் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட்டை இழப்பை தடுத்தனர். இதன்மூலம் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட் இழப்பிற்கு 80 ரன்களை எடுத்துள்ளது. இதில் பெட்டிங்ஹாம் 29 ரன்களுடனும், பீட்டர்சென் 2 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். நியூசிலாந்து தரப்பில் கைல் ஜேமிசன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.