ஆஸ்திரேலிய மகளிர் அணி தற்சமயம் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று வெலிங்டனில் நடைபெற்றது. 

Advertisement

இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது. இதையடுத்து கேப்டன் அலிசா ஹீலி மற்றும் போப் லிட்ச்ஃபீல்ட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்ததுடன் முதல் விக்கெட்டிற்கு 88 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். பின் 39 ரன்கள் எடுத்த கையோடு அலிசா ஹீலி விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதம் கடந்திருந்த போப் லிட்ச்ஃபீல்ட் 50 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர். பின்னர் களமிறங்கிய எல்லிஸ் பெர்ரி, பெத் மூனி அகியோரும் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர். 

Advertisement

அதன்பின் இணைந்த அனபெல் சதர்லேண்ட் - ஆஷ்லே கார்ட்னர் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அனபெல் சதர்லேண்ட் 42 ரன்னில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதம் கடந்திருந்த ஆஷ்லே கார்ட்னர் 74  ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய வீரர்களும் சோபிக்க தவற, ஆஸ்திரேலிய அணி 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 290 ரன்களைச் சேர்த்தது. நியூசிலாந்து தரப்பில் அமெலியா கெர் 4 விக்கெட்டுகளையும், ரோஸ்மரி மைர் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து மகளிர் அணிக்கு சூஸி பேட்ஸ் மற்றும் இஸபெல்லா ரோஸ் இணை சிறப்பான தொடக்கத்தை கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். இதில் இஸபெல்லா ரோஸ் 24 ரன்னில் ஆட்டமிழந்த நிலையில், மற்றொரு தொடக்க வீராங்கனை சூஸி பேட்ஸ் தனது அரைசதத்தை பதிவுசெய்தார். பின் 53 ரன்கள் எடுத்த கையோடு சூஸி பேட்ஸ் தனது விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து அமெலியா கெர் 22 ரன்னிலும், கேப்டன் சோஃபி டிவைன் 25 ரன்னிலும் என விக்கெட்டி இழந்தனர். 

பின்னர் ஜோடி சேர்ந்த ப்ரூக் ஹாலிடே மற்றும் மேடி கிரீன் இணை ஓரளவு தாக்குப்பிடித்து ஸ்கோரை உயர்த்தினர். இதில் ப்ரூக் ஹாலிடே 27 ரன்னில் விக்கெட்டை இழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மேடி கிரீன் 39 ரன்களை எடுத்த நிலையில் மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் நியூசிலாந்து அணி 43.3 ஓவர்களில் 215 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இதன்மூலம் ஆஸ்திரேலிய மகளிர் அணி 75 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் வென்று அசத்தியது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News