ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தயாராகும் வகையில் பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் இணைந்து முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளன. மொத்தம் 4 போட்டிகள் கொண்ட இத்தொடரின் இரண்டாவது போட்டி இன்று (பிப்ரவரி 10) நடைபெற்றது. லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

Advertisement

இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து தென் ஆப்பிரிக்க அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு கேப்டன் டெம்பா பவுமா - ரியான் ரிக்கெல்டன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் கேப்டன் டெம்பா பவுமா 20 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் ரிக்கெல்டனுடன் இனைந்த ஜேசன் ஸ்மித்தும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் ரியான் ரிக்கெல்டன் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். 

Advertisement

அதேசமயம் மறுமுனையில் அரைசதத்தை நெருங்கிய ஜேசன் ஸ்மித் ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 41 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய கைல் வெர்ரைனும் ஒரு ரன்னுடன் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய வியான் முல்டரும் அபாரமாக விளையாட அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். மறுமுனையில் சிறப்பாக விளையாடி வந்த ரியான் ரிக்கெல்டன் தனது அறிமுக போட்டியிலேயே சதமடித்து அசத்தினார். அதன்பின்னரும் அதிரடியாக விளையாடி வந்த மேத்யூ பிரீட்ஸ்கி 11 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 150 ரன்களைக் குவித்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார். 

அவரைத்தொடர்ந்து அரைசதம் கடந்து விளையாடி வந்த வியான் முல்டர் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 64 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். இறுதியில் தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 304 ரன்களைச் சேர்த்தது. நியூசிலாந்து அணி தரப்பில் வில்லியம் ஓ ரூர்க், மேட் ஹென்றி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், மைக்கேல் பிரேஸ்வெல் ஒரு விக்கட்டையும் கைப்பற்றினர். இதனையடுத்து 305 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு வில் யங் மற்றும் டெவான் கான்வே இணை தொடக்கம் கொடுத்தனர். 

இதில் 19 ரன்கள் எடுத்திருந்த நிலையில் வில் யங் தனது விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து டெவான் கான்வேவுடன் ஜோடி சேர்ந்த அனுபவ வீரர் கேன் வில்லியம்சன் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்த்தொடங்கியது. இதில் இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடியதுடன் தங்கள் அரைசதங்களையும் பதிவுசெய்து அசத்தினர். இதன்மூலம் இருவரின் பார்ட்னர்ஷிப்பும் 187 ரன்களை எட்டியது. இதில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட டெவான் கான்வே 9 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 97 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார். 

அவரைத்தொடர்ந்து களமிறங்கிய டேரில் மிட்செல் 10 ரன்களுக்கும், டாம் லேதம் ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். மறுமுனையில் தொடர்ந்து அபாரமாக விளையாடி வந்த கேன் வில்லியம்சன் 72 பந்துகளில் தனது சதத்தைப் பதிவுசெய்து அசத்தியதுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 13 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 133 ரன்களையும், அவருடன் இணைந்து விளையாடிய கிளென் பிலீப்ஸ் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 28 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் நியூசிலாந்து அணி 48.4 ஓவர்களில் இலக்கை எட்டியது. 

Advertisement

இதனால் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இந்த ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. மேற்கொண்டு இந்த வெற்றியின் மூலம் நடைபெற்று வரும் முத்தரப்பு தொடரின் இறுதிப்போட்டிக்கும் நியூசிலாந்து அணி முன்னேறி அசத்தியுள்ளது. இப்போட்டியில் சதமடித்து அசத்திய கேன் வில்லியம்சன் ஆட்டநாயகன் விருதை வென்றார். இதனையடுத்து நாளை மறுநாள் நடைபெறும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News