SA vs ENG, 1st ODI: நோர்ட்ஜே, மகாலா பந்துவீச்சில் வீழ்ந்தது இங்கிலாந்து!
இங்கிலாந்து அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க வீரர்கள் குயிண்டன் டி காக் மற்றும் டெம்பா பவுமா ஆகிய இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 61 ரன்களை சேர்த்தனர். பவுமா 36 ரன்களுக்கும், டி காக் 37 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். 3ஆம் வரிசையில் இறங்கிய வாண்டர்டசன் நிலைத்து நின்று அடித்து ஆட, மறுமுனையில் மார்க்ரம் (13), ஹென்ரிச் கிளாசன்(30) ஆகியோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.
ஒருமுனையில் மற்ற வீரர்கள் குறைந்த ரன்களுக்கு ஆட்டமிழந்தாலும், நிலைத்து நின்று பொறுப்புடன் விளையாடிய வாண்டர்டசன் சதமடித்தார். வாண்டர்டசனும் டேவிட் மில்லரும் இணைந்து 5ஆவது விக்கெட்டுக்கு 110 ரன்களை குவித்தனர். வாண்டர்டசன் 117 பந்தில் 111 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். சிறப்பாக ஆடிய டேவிட் மில்லர் அரைசதம் அடித்தார்.
அதன்பின் 53 ரன்கள் அடித்த டேவிட் மில்லர் கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். இதனால் 50 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 298 ரன்களை குவித்தது. இங்கிலாந்து தரப்பில் சாம் கரண் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து சவாலான இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணியில் ஜேசன் ராய் - டேவிட் மாலன் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் டேவிட் மாலன் 59 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் அதிரடியாக விளையாடிய ஜேசன் ராய் சதமடித்து அசத்தினார்.
அதன்பின் 91 பந்துகளில் 4 சிக்சர், 11 பவுண்டரிகளுடன் 113 ரன்களைச் சேர்த்திருப்த ஜேசன் ராய், காகிசோ ரபாடா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய பென் டக்கெட், ஹாரி ப்ரூக் ஆகியோரும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழக்க, பின்னர் களமிறங்கிஅய் கேப்டன் ஜோஸ் பட்லரும் 36 ரன்களுடன் நடையைக் கட்டினார்.
இதைனைத்தொடர்ந்து மொயீன் அலி, சாம் கரண், டேவிட் வில்லி, ஆதில் ரஷித், ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதனால் 44.2 ஓவர்களில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 271 ரன்களை மட்டுமே எடுத்தது. தென் ஆப்பிரிக்க தரப்பில் ஆண்ட்ரிச் நோர்ட்ஜே 4 விக்கெட்டுகளையும், சிசாண்ட மகாலா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது.