PAK vs NZ, 2nd Test: ஆண்டின் முதல் சதத்தைப் பதிவுசெய்த டெவான் கான்வே; இறுதியில் நியூசி தடுமாற்றம்!
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நியூசிலாந்து அணி தற்போது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று கராச்சியில் தொடங்கியுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கிவுள்ளது. இப்போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் நட்சத்திர வீரர் ஹசன் அலி இடம்பிடித்துள்ளார்.
இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கும் டெவான் கான்வே - டாம் லேதம் இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடக்க, அணியின் ஸ்கோரும் 100 ரன்களைக் கடந்தது.
இவரும் இருவரும் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வர அணியின் ஸ்கோரும் உயர்ந்து வருகிறது. இதேபோல் அபாரமாக விளையாடிவரும் இருவரும் தற்போது சதத்தை நோக்கி முன்னேறின. அதேசமயம் இந்த இணையை பிரிக்க முடியாமல் பாகிஸ்தான் அணியின் மிர் ஹம்சா, நசீம் ஷா, ஹசன் அலி, அப்ரார் அஹ்மத், ஆகா சல்மான் ஆகியோர் தடுமாறினர்.
அதன்பின் 71 ரன்கள் எடுத்த நிலையில் டாம் லேதம் ஆட்டமிழக்க, மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டெவான் கான்வே சதமடித்து அசத்தினார். மேலும் இந்த ஆண்டில் பதிவுசெய்யப்பட்ட முதல் சர்வதேச சதமாகவும் இது அமைந்தது. முன்னதாக கடந்த 2022ஆம் ஆண்டிலும் முதல் சதத்தைப் பதிவுசெய்த வீரர் எனும் பெருமையையும் டெவான் கான்வே பெற்றிருந்தார்.
அதன்பின் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய டெவான் கான்வே 122 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த கேன் வில்லியம்சன் 36 ரன்களிலும், ஹென்றி நிக்கோலஸ் 26 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர். பின்னர் டேரில் மிட்செல் 3, மைக்கேல் பிரேஸ்வெல் ரன் ஏதுமின்றியும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
இதில் 234 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்திருந்த நியூசிலாந்து அணி, அடுத்த 45 ரன்களுக்குள்ளாக 6 விக்கெட்டுகளை இழந்தது. பின்னர் ஜோடி சேர்ந்த டாம் பிளெண்டல் - இஷ் சோதி இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தனர்.
இதன்மூலம் முதல்நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 309 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் டாம் பிளெண்டல் 30 ரன்களுடனும், இஷ் சோதி 11 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். பாகிஸ்தான் தரப்பில் ஆகா சல்மான் 3 விக்கெட்டுகளையும், நசீம் ஷா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர்.