ஜிம்பாப்வே - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஹராரே வில் நடைபெற்றது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி, இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

Advertisement

பாகிஸ்தான் அணியின் அபித் அலி - அசார் அலியின் பார்ட்னர்ஷிப் பால், முதல் விக்கெட்டை விரைவில் இழந்த பாகிஸ்தான் அணி, 2வது விக்கெட்டுக்கு 236 ரன்களை குவித்தது. அபாரமாக ஆடி சதமடித்த அசார் அலி 126 ரன்களுக்கு ஆட்டமிழக்க,  பாபர் அசாம், ஃபவாத் ஆலம் ஆகிய இருவரும் ஒற்றை இலக்கத்தில் வெளியேற, சஜித் கான் 20 ரன்னிலும், முகமது ரிஸ்வான் 21 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

Advertisement

ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து நின்று அபாரமாக ஆடிய அபித் அலி இரட்டை சதமடித்தார். அவருடன் இணைந்து சிறப்பாக ஆடிய நௌமன் அலி 97 ரன்னில் ஆட்டமிழக்க, அத்துடன் 510 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸை பாகிஸ்தான் அணி டிக்ளேர் செய்தது.  இதில் பாகிஸ்தான் அணியின் அபித் அலி 215 ரன்களுடன் இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய ஜிம்பாப்வே அணி தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த நிலையில், 2ஆம் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 52 ரன்கள் அடித்திருந்தது. அதன் பின் 3ஆம் நாளான நேற்றைய ஆட்டத்திலும் சீரான இடைவெளியில் ஜிம்பாப்வே வீரர்கள் ஆட்டமிழக்க, 132 ரன்களுக்கே ஆல் அவுட்டானது அந்த அணி.

பாகிஸ்தான் அணி சார்பில் ஹசன் அலி அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 378 ரன்கள் பின்தங்கிய நிலையில், 2வது இன்னிங்ஸை ஆடிய ஜிம்பாப்வே அணி, இந்த இன்னிங்ஸிலும் விக்கெட்டுகளை மளமளவென இழந்தது. தாக்குப்பிடித்து ஆடி அரைசதம் அடித்து சதத்தை நெருங்கிய சகாப்வாவும் 80 ரன்னில் ஆட்டமிழக்க, கேப்டன் பிரண்டன் டெய்லர் 49 ரன்னில் ஆட்டமிழக்க, மற்ற அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறினர்.

இதையடுத்து 3ஆம் நாள் ஆட்ட முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு ஜிம்பாப்வே அணி  220 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது.. பாகிஸ்தானை விட 157 ரன்கள் ஜிம்பாப்வே பின் தங்கியிருக்கும் நிலையில், இன்றைய நாளின் ஐந்தாவது ஓவரிலே ஜிம்பாப்வே அணியின் கடைசி விக்கெட்டும் வீழ்ந்தது. 

Advertisement

இதன் மூலம் பாகிஸ்தான் அணி இன்னிங்ஸ் மற்றும் 147 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கிலும் கைப்பற்றி அசத்தியது. பாகிஸ்தான் அணி தரப்பில் ஷாஹீன் அஃப்ரிடி, நௌமன் அலி ஆகியோர் தலா ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

மேலும் இப்போட்டியில் இரட்டை சதமடித்த அபித் அலி ஆட்டநாயகனாகவும், தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹசன் அலி தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News