ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஃபுளோரிடாவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணியானது பாகிஸ்தான் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்களைச் சேர்த்தது.

Advertisement

அயர்லாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக கரெத் டெலானி 31 ரன்களையும், ஜோஷுவா லிட்டில் 22 ரன்களையும் சேர்த்தனர். பாகிஸ்தான் தரப்பில் ஷாஹீன் அஃப்ரிடி, இமாத் வசீம் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணிக்கு சைம் அயூப் - முகமது ரிஸ்வான் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். 

Advertisement

இதில் அயூப் மற்றும் ரிஸ்வான் ஆகியோர் தலா 17 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஃபகர் ஸமாம், உஸ்மான் கான், சதாப் கான் மற்றும் இமாத் வசிம் என அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதனையடுத்து களமிறங்கிய அப்பாஸ் அஃப்ரிடியும் தனது பங்கிற்கு 17 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். 

இருப்பினும் அடுத்து வந்த ஷாஹின் அஃப்ரிடி 2 சிக்ஸர்களை பறக்கவிட்டு அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றார். இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேப்டன் பாபர் அசாம் 2 பவுண்டரிகளுடன் 32 ரன்களையும், ஷாஹீன் அஃப்ரிடி 2 சிக்சர்களுடன் 13 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் பாகிஸ்தான் அணியானது 18.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 3 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது.

இந்நிலையில் இப்போட்டியில் பாபர் ஆசாம் 32 ரன்களைச் சேர்த்ததன் மூலம் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை ஒன்றையும் படைத்துள்ளார். அதன்படி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் கேப்டனாக அதிக ரன்கள் அடித்த வீரர் எனும் சாதனையை பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசாம் படைத்துள்ளார். முன்னதாக இந்திய அணி கேப்டன் மகேந்திர சிங் தோனியிடம் இச்சாதனை இருந்தது. 

 

Advertisement

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி டி20 உலகக்கோப்பை தொடர்களில் 29 இன்னிங்களில் 529 ரன்களை குவித்ததே சாதனையாக இருந்து வந்த நிலையில், தற்போது பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசாம் 17 இன்னிங்ஸ்களில் 549 ரன்களை குவித்து புதிய சாதனை படைத்துள்ளார். இப்பட்டியலில் நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் 19 இன்னிங்ஸ்களில் 527 ரன்களை எடுத்து மூன்றாம் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News