ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஃபுளோரிடாவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணியானது பாகிஸ்தான் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்களைச் சேர்த்தது.

Advertisement

அயர்லாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக கரெத் டெலானி 31 ரன்களையும், ஜோஷுவா லிட்டில் 22 ரன்களையும் சேர்த்தனர். பாகிஸ்தான் தரப்பில் ஷாஹீன் அஃப்ரிடி, இமாத் வசீம் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணிக்கு சைம் அயூப் - முகமது ரிஸ்வான் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். 

Advertisement

இதில் அயூப் மற்றும் ரிஸ்வான் ஆகியோர் தலா 17 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஃபகர் ஸமாம், உஸ்மான் கான், சதாப் கான் மற்றும் இமாத் வசிம் என அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதனையடுத்து களமிறங்கிய அப்பாஸ் அஃப்ரிடியும் தனது பங்கிற்கு 17 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். 

இருப்பினும் அடுத்து வந்த ஷாஹின் அஃப்ரிடி 2 சிக்ஸர்களை பறக்கவிட்டு அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றார். இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேப்டன் பாபர் அசாம் 2 பவுண்டரிகளுடன் 32 ரன்களையும், ஷாஹீன் அஃப்ரிடி 2 சிக்சர்களுடன் 13 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் பாகிஸ்தான் அணியானது 18.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 3 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது.

இந்நிலையில் நடப்பு ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரில் நான்கு போட்டிகளில் விளையாடிய பாகிஸ்தான் அணியானது 2 வெற்றி 2 தோல்விகளைச் சந்தித்து லீக் சுற்றுடன் வெளியேறியுள்ளது. கடந்த முறை இறுதிப்போட்டி வரை முன்னேறிய பாகிஸ்தான் அணி நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் லீக் சுற்றைக் கூட தாண்டாதது அந்த அணி மீதான விமர்சனங்களை அதிகரித்துள்ளது. 

 

Advertisement

இந்நிலையில் நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியின் படுதோல்வி குறித்து பேசிய அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் கேரி கிரிஸ்டன், “பாகிஸ்தான் அணியில் ஒற்றுமை இல்லை. பொதுவாக நீங்கள் உங்களை ஒரு அணி என்று சொல்வீர்கள். ஆனால் அது ஒரு அணியல்ல. ஏனெனில் நீங்கள் ஒருவருக்கொருவர் ஆதரவு கொடுப்பதில்லை. ஒவ்வொருவரும் பிரிந்துள்ளனர். நான் பல அணிகளுடன் வேலை செய்துள்ளேன். ஆனால் இது போன்ற சூழ்நிலையை பார்த்ததில்லை.

உலகக்கோப்பை தொடரில் போட்டியிட வேண்டுமானால், வீரர்கள் தங்களது உடற்தகுதி மற்றும் திறன்களை மேம்படுத்தி ஒற்றுமையாக இருக்க வேண்டும். உடற்தகுதியில் நாங்கள் மிகவும் பின்தங்கியுள்ளோம். இதனால் இனி வருங்காலங்களில் உடற்தகுதியை மேம்படுத்த விரும்பும் வீரர்கள் மட்டுமே அணியில் இருப்பார்கள்” என்று தெரிவித்துள்ளார். கேரி கிரிஸ்டனின் இந்த கருத்தானது தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News