PAK vs BAN, 1st T20I: ஹசன் அலி, ஷதாப் அபாரம்; வங்கதேசத்தை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி!

Updated: Thu, May 29 2025 11:36 IST
Image Source: Google

வங்கதேச அணியானது பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இதில் இன்று லாகூரில் நடைபெற்ற இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. 

அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு தொடக்கம் சிறப்பானதாக அமையவில்லை. அணியிந்தொடக்க வீரர்கள் சைம் அயுப் ரன்கள் ஏதுமின்றியும், ஃபகர் ஸமான் ஒரு ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் இணைந்த முகமது ஹாரிஸ் - கேப்டன் சல்மான் ஆகா இணை பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய் முகமது ஹாரிஸ் 4 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 31 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார். 

அவரைத்தொடர்ந்து அரைசதம் கடந்து அசத்திய கேப்டன் சலமான் ஆகாவும் 8 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் என 56 ரன்களுடன் நடையைக் கட்டினார். அதன்பின் ஜோடி சேர்ந்த ஹசன் நவாஸ் மற்றும் ஷதாப் கான் இருவரும் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹசன் நவாஸ் 2 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 44 ரன்களில் விக்கெட்டை இழக்க, இறுதியில் அதிரடியாக விளையாடிய ஷதாப் கானும் 5 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 48 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 

இதன் காரணமாக பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்களைச் சேர்த்தது. வங்கதேச அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஷொரிஃபுல் இஸ்லாம் 2 விக்கெட்டுகளையும், மஹெதி ஹசன், ஹசன் மஹ்முத், தன்ஸிம் ஹசன், ரிஷாத் ஹொசைன் மற்றும் ஷமிம் ஹொசைன் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். பின்னர் களமிறங்கிய வங்கதேச அணியில் தொடக்க வீரர் பர்வெஸ் ஹொசைன் எமான் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் இணைந்த தன்ஸித் ஹசன் - லிட்டன் தாஸ் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். 

இதில் அதிரடியாக விளையாடிய தன்ஸித் ஹசன் 31 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய தாவ்ஹித் ஹிரிடோய் 17 ரன்கள்ய்டன் பெவிலியன் திரும்பினார். பின்னர் இணைந்த லிட்டன் தாஸ் - ஜக்கர் அலி இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தும் முனைப்பில் இறங்கினர். இதில் அரைசதத்தைப் பதிவுசெய்வார் என எதிர்பார்க்கப்பட்ட லிட்டன் தாஸ் ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 48 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து ஜக்கர் அலி ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 36 ரன்களைச் சேர்த்தும் ஆட்டமிழந்தனர். 

Also Read: LIVE Cricket Score

பின்னர் களமிறங்கிய வீரர்களும் எதிரணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் வங்கதேச அணி 19.2 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 164 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஹசன் அலி 5 விக்கெட்டுகளையும், ஷதாப் கான் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் பாகிஸ்தான் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன் 1-0 என்ற கணக்கில் டி20 தொடரிலும் முன்னிலை பெற்றுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை