நடப்பு சீசன் விஜய் ஹசாரே கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற 4ஆவது சுற்று ஆட்டத்தில் குரூப் சி பிரிவில் இடம்பிடித்துள்ள மும்பை மற்றும் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து மும்பை அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. 

Advertisement

இதையடுத்து களமிறங்கிய மும்பை அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அதன்படி, அங்கிரிஷ் ரகுவன்ஷி ஒரு ரன்னிலும், ஹர்திக் தோமர் ரன்கள் ஏதுமின்றியும், ஆயூஷ் மத்ரே 7 ரன்களிலும், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 17 ரன்களிலும், சூர்யகுமார் யாதவ் ரன்கள் ஏதுமின்றியும், ஷிவம் தூபே 17 ரன்களிலும் என வரிசையாக சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர். இதனால் மும்பை அணி 61 ரன்களிலேயே 6 விக்கெட்டுகளை இழந்தது. பின் ஜோடி சேர்ந்த சூர்யன்ஷ் ஷெட்ஜ் மற்றும் அதர்வா அன்கொல்கர் இணை பொறுபுடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

Advertisement

இதில் அன்கொல்கர் தனது அரைசதத்தை பதிவுசெய்து அசத்தினார். அதேசமயம் மறுபக்கம் அதிரடியாக விளையாடிய சூர்யன்ஷ் ஷெட்ஜ் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 44 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஷர்தூல் தாக்கூர் 43 ரன்களிலும் என விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டனர். இறுதியில் அன்கொல்கர் 66 ரன்களில் விக்கெட்டை இழக்க, மும்பை அணி 48.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 248 ரன்களில் ஆல் அவுட்டானது. பஞ்சாப் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய அர்ஷ்தீப் சிங் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு பிரப்ஷிம்ரன் சிங் - அபிஷேக் சர்மா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. தொடர்ந்து அபாரமாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்த நிலையில், இவர்கள் முதல் விக்கெட்டிற்கு பார்ட்னர்ஷிப் முறையில் 150 ரன்களை சேர்த்து அணியின் வெற்றிக்கும் அடித்தளம் அமைத்தனர். பின்னர் அதிரடியாக விளையாடி வந்த அபிஷேக் சர்மா 4 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 66 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். 

அவரைத்தொடர்ந்து களமிறங்கிய அன்மோல்ப்ரீத் சிங் 6 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த பிரப்ஷிம்ரன் சிங் தனது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். மேற்கொண்டு இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பிரப்ஷிம்ரன் சிங் 14 பவுண்டரி, 10 சிக்ஸர்கள் என 150 ரன்களையும், அவருடன் இணைந்து விளையாடிய ரமந்தீப் சிங் 22 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் பஞ்சாப் அணி 29 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News