PSL 2023: ரஷித் கான் சுழலில் வீழ்ந்தது இஸ்லாமாபாத் யுனைடெட்!
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 8ஆவது சீசன் இறுதிகட்டத்தை நெருங்கி வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 26ஆவது லீக் ஆட்டத்தில் லாகூர் கலந்தர்ஸ் - இஸ்லாமாபாத் யுனைடெட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற லாகூர் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது.
அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக அப்துலா ஷஃபிக் ஒரு ரன் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த ஃபகர் ஸமான் - காம்ரன் குலாம் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ஃபகர் ஸமான் அரைசதம் கடந்து அசத்த, மறுமுனையில் 41 ரன்களில் குலாம் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
இதையடுத்து களமிறங்கிய சாம் பில்லிங்ஸ், ஃபகர் ஸமானுடன் இணைந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதேசமயம் பவுண்டரியும், சிக்சர்களுமாக பறக்கவிட்டு பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடி கொடுத்து வந்த ஃபகர் ஸமான் 50 பந்துகளில் சதமடித்தது, இந்த சீசனில் தனது இரண்டாவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
பின்னர் அதிரடியாக விளையாடிய ஃபகர் ஸமான் 57 பந்துகளில் 8 பவுண்டரி, 8 சிக்சர்கள் என 115 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். இவரைத்தொடர்ந்து 22 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 32 ரன்களைச் சேர்திருந்த சாம் பில்லிங்ஸும் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த டேவிட் வைஸ் முதல் பந்தை சிக்சருக்கு பற்றக்கவிட்டாலும், இரண்டாவது பந்திலேயே விக்கெட்டையும் இழந்தார்.
இறுதியில் ரஷித் கான் தனது பங்கிற்கு ஒரு சில பவுண்டரிகளை பறக்கவிட, 20 ஓவர்கல் முடிவில் லாகூர் கலந்தர்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 226 ரன்களைக் குவித்தது. இஸ்லாமாபாத் தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஃபசல்ஹக் பாரூக்கி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய இஸ்லாமாபாத் யுனைடெட் அணி வீரர்கள் தொடக்கம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வந்தனர். அந்த அணியில் அதிகபட்சமாக அலெக்ஸ் ஹேல்ஸ் 18 ரன்களையும், ரஹ்மனுல்லா குர்பாஸ் 15 ரன்களையும் மட்டுமே எடுத்தனர்.
மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து நடையைக் கட்ட, இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 15.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 107 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. லாகூர் அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ரஷித் கான் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம் லாகூர் கலந்தர்ஸ் அணி 119 ரன்கள் வித்தியாசத்தில் இஸ்லாமாபாத் யுனைடெட்டை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது.