பிஎஸ்எல் 2024: ரூதர்ஃபோர்ட் அபார ஆட்டம்; குயிட்டா கிளாடியேட்டர்ஸ் த்ரில் வெற்றி!
ஒன்பதாவது சீசன் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரானது இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற16ஆவது லீக் ஆட்டத்தில் கராச்சி கிங்ஸ் மற்றும் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கராச்சியிலுள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி பேட்டிங்கைத் தொடர்ந்த கராச்சி கிங்ஸ் அணிக்கு கேப்டன் ஷான் மசூத் - டிம் செய்ஃபெர்ட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஷான் மசூத் 2 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளிக்க, அதிரடியாக தொடங்கிய டிம் செய்ஃபெர்ட் 21 ரன்களிலும், அடுத்து வந்த சோயப் மாலிக் 12 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த ஜேம்ஸ் வின்ஸ் - முகமது நவாஸ் இணை ஓரளவு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயார்த்தினர்.
இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜேம்ஸ் வின்ஸ் 37 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்ப, அவரைத் தொடர்ந்து 28 ரன்கள் எடுத்திருந்த முகமது நவாஸும் தனது விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். பின்னர் அணியின் நம்பிக்கையாக கீரென் பொல்லார்ட் 13 ரன்களுக்கும், இர்ஃபான் கான் 15 ரன்களுக்கும் என நடையைக் கட்டினர்.
அதன்பின் இறுதியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய அன்வர் அலி ஒரு பவுண்டரி, 2 சிக்சர்களை விளாசி 25 ரன்களைச் சேர்த்து ஃபினீஷிங்கைக் கொடுத்தனர். இதன்மூலம் கராச்சி கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்களைச் சேர்த்துள்ளது. குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணி தரப்பில் அப்ரார் அஹ்மத் 3 விக்கெட்டுகளையும், அகீல் ஹொசைன், உஸாமா தாரிக் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்கு ஜேசன் ராய் - சௌத் சகீல் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர். இதில் சௌத் சகீல் 24 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், அடுத்து களமிறங்கிய கவாஜா நஃபே 2 ரன்களுக்கும், சர்ஃப்ராஸ் அஹ்மத் 3 ரன்களுக்கும், கேப்டன் ரைலீ ரூஸோவ் 6 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர்.
அதேசமயம் மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜேசன் ராய் அரைசதம் கடந்து அசத்திய நிலையில், 2 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 52 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த ரூதர்ஃபோர்ட் - அகீல் ஹொசைன் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ரூதர்ஃபோர்ட் ஒரு பவுண்டரி, 6 சிக்சர்கள் என 58 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார்.
இதன்மூலம் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் கராச்சி கிங்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. மேலும் இபோட்டியில் வெற்றிக்கு காரணமாக இருந்த குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணியின் ஆல் ரவுண்டர் ரூதர்ஃபோர்ட் இப்போட்டியின் ஆட்டநாயகனாகத் தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.