பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 10ஆவது சீசன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 5ஆவது லீக் போட்டியில் இஸ்லாமாபாத் யுனைடெட் மற்றும் பெஷாவர் ஸால்மி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ராவல்பிண்டியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற யுனைடெட் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய இஸ்லாமாபாத் யுனைடெட் அணியில் தொடக்க வீரர் ஆண்ட்ரிச் கஸ் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். பின்னர் இணைந்த சாஹிப்சாதா ஃபர்ஹான் மற்றும் காலின் முன்ரோ இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதன்மூலம் இருவரும் இணைந்த இரண்டாவது விக்கெட்டிற்கு 146 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். அதன்பின் அரைசதத்தை நெருங்கிய காலின் முன்ரோ 6 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் என 40 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். 

Advertisement

அதேசமயம் மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சாஹிப்சதா ஃபர்ஹான் சதமடித்து மிரட்டியதுடன், 13 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் என 106 ரன்களைச் சேர்த்து தனது விக்கெட்டை இழந்தார். அதனைத்தொடர்ந்து களமிறங்கிய வீரர்களில் அசாம் கான் 16, சல்மான் அலி ஆகா 30, ஜேசன் ஹோல்டர் 20, பென் துவார்ஷூயிஸ் 18 ரன்களைச் சேர்க்க, இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 243 ரன்களைக் குவித்தது. பெஷாவர் அணி தரப்பில் அல்ஸாரி ஜோசப், ஹுசைன் தாலத் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய பெஷாவர் ஸால்மி அணிக்கு சரியான தொடக்கம் கிடைக்கவில்லை. அணியின் தொடக்க வீரர்கள் கேப்டன் பாபர் ஆசாம் ஒரு ரன்னிலும், சைம் அயுப் 6 ரன்னிலும், மிட்செல் ஓவன் 10 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் அந்த அணி 26 ரன்களிலேயே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் இணைந்த முகமது ஹாரிஸ் மற்றும் டாம் கொஹ்லர் காட்மோர் இணை அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் ஹாரிஸ் அரைசதம் கடக்க, இருவரின் பார்ட்னர்ஷிப்பும் 50 ரன்களை எட்டியது. 

அதன்பின் 10 ரன்காளில் கொஹ்லர் காட்மோர் விக்கெட்டை இழக்க அடுத்த களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர். இதில் இறுதிவரை போராடிய முகமது ஹாரிஸ் 12 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 87 ரன்களைச் சேர்த்த கையோடு விக்கெட்டை இழக்க, மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தானர். இதனால் பெஷாவர் ஸால்மி அணி 18.2 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 141 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் பெஷாவர் ஸால்மி அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News