பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் நேற்று நடைபெற்ற 18ஆவது லீக் ஆட்டத்தில் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் - இஸ்லாமாபாத் யுனைடெட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின .
இதில் முதலில் பேட்டிங் செய்த இஸ்லாமாபாத் அணி அலெக்ஸ் ஹேல்ஸ், ஃபஹீம் அஷ்ரஃப் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தினால் 20 ஓவர்களில் 199 ரன்களைச் சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக அலெக்ஸ் ஹேல்ஸ் 62 ரன்களையும், ஃபஹீம் அஷ்ரஃப் 55 ரன்களையும் சேர்த்தனர். கிளாடியேட்டர்ஸ் அணி தரப்பில் அஃபிரிடி, ஃபால்க்னர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதையடுத்து இலக்கை துரத்திய கிளாடியேட்டர்ஸ் அணிக்கு ஜேசன் ராய் - அஹ்சன் அலி இணை அபாரமான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் அஹ்சன் அலி 30 ரன்களில் ஆட்டமிழக்க, ஜேசன் ராய் அரைசதம் கடந்து 54 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
இறுதியில் கேப்டன் சர்ஃப்ராஸ் அஹ்மத் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்ததுடன், அணிக்கு வெற்றியையும் தேடித்தந்தார்.
இதன்மூலம் 19.4 ஓவர்களில் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணி இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணியை வீழ்த்தியது.