ஐசிசி ஒருநாள் தரவரிசை: ரஹ்மனுல்லா குர்பாஸ், ரஷித் கான் அபார வளர்ச்சி!
ஆஃப்கானிஸ்தான் அணியானது சமீபத்தில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இத்தொடரின் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி 2-1 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தியதுடன், வரலாற்று சாதனையையும் படைத்து அசத்தியது.
இது ஒருபுறம் இருக்கம், இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரும் நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்று முடிந்துள்ளது 3 போட்டிகளின் முடிவில் ஆஸ்திரேலிய அணியானது 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகித்து வருகிறது. இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி இன்று ஒருநாள் கிரிக்கெட் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது.
இதில் ஒருநாள் பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் ஆஃப்கானிஸ்தான் அணியின் அதிரடி தொடக்க வீரர் ரஹ்மனுல்லா குர்பாஸ் 10 இடங்கள் முன்னேறி 8ஆம் இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் அவர் இந்த வளர்ச்சியை எட்டியுள்ளார். அதேசமயம் இங்கிலாந்து தொடரில் கலக்கி வரும் ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட்டும் 7 இடங்கள் முன்னேறி 9ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இதுதவிர பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் பாகிஸ்தானின் பாபர் அசாம் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வரும் நிலையில், இந்திய அணி வீரர்கள் ரோஹித் சர்மா, ஷுப்மன் கில் மற்றும் விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் தொடர்கின்றனர். இதையடுத்து ஒருநாள் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் தென் ஆப்பிரிக்காவின் கேசவ் மஹாராஜ் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார்.
அவருக்கு அடுத்த இடத்தில் ஆஸ்திரேலிய அணியின் ஆடம் ஸாம்பா உள்ள நிலையில், தென் ஆப்பிரிக்க ஒருநாள் தொடரில் அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்திய ரஷித் கான் 8 இடங்கள் முன்னேறி 03ஆம் இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். இதுதவிர பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர்கள் குல்தீப் யாதவ் 4ஆம் இடத்திலும், ஜஸ்பிரித் பும்ரா 8ஆம் இடத்திலும், முகமது சிராஜ் 10 ஆம் இடத்திலும் தொடர்கின்றனர்.
Also Read: Funding To Save Test Cricket
மேற்கொண்டு ஒருநாள் ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் ஆஃப்கானிஸ்தான் அணியின் முகமது நபி முதலிடத்திலும், வங்கதேசத்தில் ஷாகிப் அல் ஹசன் இரண்டாம் இடத்திலும், ஜிம்பாப்வேவின் சிக்கந்தர் ரஸா மூன்றாம் இடத்திலும் தொடர்கின்றனர். அதேசமயம் ஆஃப்கானின் ரஷித் கான் ஒரு இடம் முன்னேறி 4ஆம் இடத்தையும், ஆஸ்திரேலிய அணியின் கிளென் மேக்ஸ்வெல் 5ஆம் இடத்திற்கும் முன்னேறியுள்ளனர்.