இனிமேல் தான் இவர்கள் சவால்களை சந்திப்பார்கள் - ராகுல் டிராவிட்!
இந்திய அணியின் தற்போதைய வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் மிகவும் முக்கியமான மாற்றங்கள் நடைபெற்று வருகிறது. டெஸ்ட் மற்றும் டி20 தொடர்களுக்கான இந்திய அணிகளில் புதிய பேட்ஸ்மேன்கள் வந்திருக்கிறார்கள். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் சொதப்பிய புஜாரா நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. அவர் சதம் அடித்து தன்னை நிரூபித்ததோடு, தொடக்க இடத்தில் வந்து விளையாடினார் என்பது தான் முக்கியமானது.
ஏனென்றால் அவர் துவக்க இடத்திற்கு வருவதற்கு முக்கிய காரணமாக இந்திய அணியின் எதிர்கால நட்சத்திரம்கில் தன்னை மூன்றாவது வீரராக பயிற்சியாளரிடம் கேட்டு கீழே இறக்கிக் கொண்டார். இதனால் கில் எப்படியும் அந்த இடத்தில் இருந்து நகர போவதில்லை. இதனால் புஜாராவின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை கேள்விக்குறியாக நிற்கிறது.
தற்பொழுது இந்த இரு இளம் வீரர்கள் குறித்து பேசி உள்ள இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், "ஜெய்ஸ்வால் மற்றும் கில் தொடர்ந்து பல சர்வதேச போட்டிகளை விளையாடுவதால் சவால்களை சந்திப்பார்கள் என்று நான் அறிவேன். எதிரணிகள் அவர்களை மிக நன்றாக அறிந்து கொள்ள தொடங்கும். ஜெயஸ்வால் மற்றும் கில்லுக்கு இந்தச் சுற்றுப்பயணத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் யூகங்களை முறியடித்து விளையாடுவது முக்கியமாகும்.
ஜெய்ஸ்வாலை எடுத்துக் கொண்டால் அவர் தன்னுடைய அதிரடி பாணியை மாற்றி, சூழ்நிலைக்கு தகுந்தார் போல் விளையாடியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அதேபோல் அவர் தேவைப்படும் நேரத்தில் அதிரடியாகவும் விளையாட தன்னை மாற்றிக் கொள்வது மிகவும் சிறப்பானது.
எங்கள் பார்வையில் நான் ஒரு பயிற்சியாளனாக இளம் வீரர்கள் வந்து நேரடியாக சிறப்பாக விளையாடுவது மகிழ்ச்சியான ஒன்றாக இருக்கிறது. இப்பொழுது ஜெய்ஸ்வாலாக இருந்தாலும் சரி, கடந்த ஆறு எட்டு மாதங்களில் கில்லாக இருந்தாலும் சரி, இவர்கள் தங்களை வெளிப்படுத்திக் கொண்ட விதம் அருமையாக இருந்தது.
நிறைய இளம் வீரர்கள் இந்திய அணிக்குள் வந்த உடனே சிறப்பாக செயல்படுகிறார்கள். இதனுடைய பெருமை உள்நாட்டு கிரிக்கெட் அமைப்புக்கு சேர்ந்தது. மேலும் அணியில் உள்ள இயல்பான சூழ்நிலை அவர்கள் உள்ளே வந்ததும் தங்களை வெளிப்படுத்திக் கொள்வதற்கு உதவியாகவும் இருக்கிறது. இதே போல வீரர்களை பேட்டிங் துறையில் இன்னும் நிறைய உருவாக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.