தென் ஆப்பிரிக்காவில் பேட்டிங் செய்வது சவாலானது - ராகுல் டிராவிட்!

Updated: Thu, Dec 07 2023 13:00 IST
தென் ஆப்பிரிக்காவில் பேட்டிங் செய்வது சவாலானது - ராகுல் டிராவிட்! (Image Source: Google)

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தோல்வியை சந்தித்த இந்தியா அடுத்ததாக நடந்த டி20 தொடரில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்று தென் ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ளது. அதில் முதலாவதாக நடைபெறும் டி20 மற்றும் ஒருநாள் தொடரை விட 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இந்தியாவுக்கு மிகவும் சவாலானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனெனில் ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் அணியாக திகழும் இந்தியா வரலாற்றில் இதுவரை ஒரு முறை கூட தென் ஆப்பிரிக்க மண்ணில் தொடரை வென்றதில்லை. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து போன்ற சவாலான வெளிநாடுகளில் குறைந்தபட்சம் ஒரு தொடரை வென்றுள்ள இந்தியா கடைசியாக தென் ஆபிரிக்காவில் 2010ஆம் ஆண்டு தோனி தலைமையில் கடுமையாக போராடி 1 – 1 (3) என்ற கணக்கில் சமன் மட்டுமே செய்தது.

எனவே இம்முறை அந்த மோசமான வரலாற்றை மாற்றுவதற்காக ரோஹித் சர்மா தலைமையிலான முதன்மை இந்திய அணியினர் களமிறங்க உள்ளனர். இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவில் இருக்கும் மைதானங்கள் உலகிலேயே பேட்டிங் செய்வதற்கு மிகவும் சவாலானது என்று ஜாம்பவான் மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய ராகுல் டிராவிட், “பேட்டிங் செய்வதற்கு சவாலான இடம் தென் ஆப்பிரிக்கா என்பதை புள்ளி விவரங்களே சொல்லும். உலகிலேயே பேட்டிங் செய்வதற்கு கடினமான இடங்களில் ஒன்று தென் ஆப்பிரிக்கா. குறிப்பாக இங்குள்ள வேகப்பந்துவீச்சுக்கு உகந்த செஞ்சூரியன், ஜோகன்னஸ்பர்க் ஆடுகளங்களில் ரன் குவிப்பது சுலபமல்ல.

ஒவ்வொரு பேட்ஸ்மேனும் இங்கு எப்படி விளையாட வேண்டும் என்ற திட்டமிடலுடன் வருவார்கள். அதற்கு ஏற்ப பயிற்சியும் மேற்கொள்வார்கள். எல்லோரும் ஒரே மாதிரி ஆடுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. ஆனால் நமது வீரர்களுக்கு எப்படி ஆடினால் கைகொடுக்கும்.

அதை எப்படி களத்தில் செயல்படுத்த வேண்டும் என்பதில் தெளிவான நிலையில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். களத்தில் நிலைத்து நிற்க வாய்ப்பு அமைந்து விட்டால், அதை வெற்றிக்குரிய இன்னிங்சாக மாற்ற முயற்சிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை