ஆஃப்கானிஸ்தான் தொடரை ஆஸி ரத்து செய்ததையடுத்து ரஷித் கான் வெளியிட்டுள்ள ட்வீட்!
ஆஃப்கானிஸ்தான் நாட்டில் பெண்களுக்கு எதிராக தலிபான் அரசு அரங்கேற்றி வரும் அநீதி மற்றும் கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அந்த நாட்டு அணியுடன் ஆஸ்திரேலியா விளையாட இருந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இருந்து விலகிக் கொள்வதாக தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி ஆப்கானிஸ்தான் ஆடவர் கிரிக்கெட் அணிக்கு எதிராக வரும் மார்ச் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட இருந்தது. அந்த தொடரில் இருந்துதான் இப்போது ஆஸ்திரேலியா இந்த காரணத்தை சொல்லி விலகி உள்ளது. இதனை கிரிக்கெட் ஆஸ்திரேலியா உறுதி செய்துள்ளது.
இந்நிலையில், தனது பிக் பேஷ் லீக் எதிர்காலம் குறித்து நிச்சயம் பரிசீலிப்பேன் என ஆஃப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கான் சூசகமாக ட்வீட் செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்வீட்டில், “எங்களுடனான தொடரில் இருந்து ஆஸ்திரேலியா வெளியேறி உள்ளதை அறிந்து நான் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளேன். எனது நாட்டுக்காக நான் விளையாடுவது எனக்கு என்றென்றும் பெருமை. கிரிக்கெட்டில் உலக நாங்கள் முன்னேற்றம் கண்டு வரும் இந்நேரத்தில் எங்களுக்கு இது பின்னடைவாக அமைந்துள்ளது. இதற்கு காரணம் கிரிக்கெட் ஆஸ்திரேலியா எடுத்துள்ள முடிவுதான்.
ஆஃப்கானிஸ்தான் உடன் விளையாடுவது ஆஸ்திரேலியாவுக்கு சங்கடத்தை கொடுத்தால் பிபிஎல் தொடரில் விளையாடி நான் யாருக்கும் சங்கடம் கொடுக்க விரும்பவில்லை. அதனால் அதில் எனது எதிர்கால பங்களிப்பு குறித்து நிச்சயம் பரிசீலிப்பேன். கிரிக்கெட் விளையாட்டுதான் எங்கள் நாட்டின் ஒரே நம்பிக்கை. ஆதலால் இதில் அரசியல் வேண்டாம்” என ரஷீத் கான் தெரிவித்துள்ளார்.