ஆட்டத்தின் போக்கை மாற்றும் ஒரு சிலரில் பும்ராவும் ஒருவர்- ரவி சாஸ்திரி புகழாரம்!

Updated: Sat, Aug 03 2024 22:51 IST
Image Source: Google

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று முடிந்த ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தையும் வென்று சாதனைப் படைத்தது. இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா திகழ்ந்தார். மேலும் இத்தொடரின் 15 விக்கெட்டுகளை கைப்பற்றி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியதன் காரணமாக தொடர் நாயகன் விருதையும் ஜஸ்பிரித் பும்ரா கைப்பற்றினார். 

இந்நிலையில், நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா சிறப்பாக செயல்பட்ட தருணங்கள் குறித்து இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஐசிசி வெளியிட்டுள்ள காணொளியில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து பேசிய ரவி சாஸ்திரி, “நடைபெற்று முடிந்த டி20 உலகக்கோப்பைத் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டி மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா அபாரமாக செயல்பட்டார். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் முகமது ரிஸ்வானின் விக்கெட்டினை அவர் கைப்பற்றியது ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. 

அதேபோல தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் மார்கோ ஜான்சனின் விக்கெட்டினைக் கைப்பற்றியதும் ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. ஏனெனில் அந்த தருணத்தில் மார்கோ ஜான்சனின் விக்கெட்  முக்கியமான ஒன்றாக இருந்தது. அதற்கு முன்னதாக ஹார்திக் பாண்டியா, ஹென்ரிச் கிளாசனின் விக்கெட்டினை எடுத்தும் அசத்தினார். இருப்பினும், ஜான்சனின் விக்கெட் கிடைத்தது மிகவும் முக்கியமானது என நினைக்கிறேன். அப்போதெல்லாம் சர்வதேச கிரிக்கெட்டில் ஆட்டத்தின் போக்கை ஒரு சிலர் மட்டுமே தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர்.

அந்தவகையில் பாகிஸ்தானின் வாசிம் அக்ரம், வாகர் யூனிஸ் மற்றும் ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்னே ஆகியோர் மட்டுமே போட்டியை எப்போதும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். அதிலும் ஷேன் வார்னே, பந்து எவ்வாறு பிட்ச் ஆக வேண்டும், எப்படி திரும்ப வேண்டும், எந்த லைனில் பந்துவீச வேண்டும் என்பதை மிகக்கச்சிதமாக செய்வதில் ஜாம்பவான். அவர்களின் வரிசையில் ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடியவர்களில் ஜஸ்பிரித் பும்ராவும் ஒருவர் என்றால் அது மிகையல்ல” என்று பாராட்டியுள்ளார். 

நடைபெற்று முடிந்த 2024 டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 19 ஓவர்களில் 119 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதன்பின் இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இந்தப் போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா 4 ஓவர்களில் 14 ரன்களை மட்டுமே கொடுத்ததுடன் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

அதேபோல் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. பின்னர் இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்கா 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்தப் போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா 4 ஓவர்களில் 18 ரன்களை விட்டுக்கொடுத்தாலும் மிக முக்கியமான 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை