இமாலய சாதனையை நோக்கி ரவிச்சந்திரன் அஸ்வின்!
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் பிப்ரவரி 9ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. நாக்பூரில் உள்ள மைதானத்தில் முதல் போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக இரு அணிகளும் கடந்தம் பிப்ரவரி 1ஆம் தேதி முதலே பயிற்சியை தொடங்கிவிட்டனர். பயிற்சி போட்டிகளே தேவையில்லை எனக்கூறிவிட்டு, அனைவரும் வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக வழக்கமாக பெரிய சம்பவங்களை செய்துள்ளது ஸ்பின்னர்கள் தான். குறிப்பாக இந்தியாவின் ஸ்டார் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு ஆஸ்திரேலிய அணியுடன் விளையாட வேண்டும் என்றால் அல்வா சாப்பிடுவது போல ஆர்வத்துடன் களமிறங்குவார். இப்படி இருக்கையில் வரவுள்ள பார்டர் கவாஸ்கர் தொடரில் பிரமாண்ட சாதனையை படைக்க காத்துள்ளார்.
ஆஃப் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வின் இதுவரை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 18 போட்டிகளில் விளையாடி 89 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு அணிக்கு எதிராக அஸ்வின் அதிக விக்கெட்களை எடுத்தது என்றால் அது ஆஸ்திரேலியா தான். இவர் இந்த தொடரில் மட்டும் 7 விக்கெட்களை எடுத்துவிட்டால், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக விக்கெட்களை கைப்பற்றிய இந்தியர்கள் பட்டியலில் 2வது இடத்தை பிடிப்பார்.
இந்த பட்டியலில் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் 2ஆவது இடத்தில் உள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 18 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அவர் 95 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். எனவே அஸ்வின் 7 விக்கெட்களை எடுத்துவிட்டால் முந்திவிடுவார். முதலிடத்தில் அனில் கும்ப்ளே 20 டெஸ்ட் போட்டிகளில் 111 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். இவரை சமன் செய்ய வேண்டும் என்றால் அஸ்வின் 22 விக்கெட்கள் தேவை.
கும்ப்ளேவின் ரெக்கார்டையும் அஸ்வின் முறியடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. ஏனென்றால் 4 டெஸ்ட் போட்டிகளுமே பெரும்பாலும் ஸ்பின்னர்களுக்கு உதவக்கூடிய பிட்ச்-களில் தான் நடக்கும் எனத்தெரிகிறது. அதற்காக தான் ஆஸ்திரேலியர்கள் ஸ்பின்னர்களுக்கு ஏற்ற பிட்ச்-ஐ தயார் செய்து பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். எனவே அஸ்வினின் சாதனையை நாம் பார்க்கலாம்.