டி20 உலகக்கோப்பை: போல்டின் கருத்துக்கு பதிலடி கொடுத்த விராட்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அடுத்ததாக நியூசிலாந்து அணியை எதிர்கொள்ளவுள்ளது. இப்போட்டி நாளை இரவு 7 மணிக்கு துபாயில் உள்ள சர்வதேச மைதானத்தில் நடைபெறவிருக்கிறது.
இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பு கிடைக்கும் என்ற இக்கட்டான சூழலில் தான் இரு அணிகளுமே உள்ளன. ஏற்கனவே கடந்த 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை அரையிறுதி மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிகளில் நியூசிலாந்திடம் இந்திய அணி அடிவாங்கியுள்ளது. எனவே இந்த முறை திருப்பிக்கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் விராட் கோலி உள்ளார்.
இப்படிபட்ட சூழலில் தான் நியூசிலாந்து வீரர் ட்ரெண்ட் போல்ட், சில வார்த்தைகளை உதிர்த்தார். இந்தியாவுக்கு எதிரான போட்டி குறித்து பேசிய அவர், “பாகிஸ்தான் வீரர் சாஹீன் அஃப்ரிடி, இந்திய அணியின் டாப் ஆர்டரை வீழ்த்தினார். அதனை போலவே நானும் இந்தியாவின் டாப் ஆர்டரை நிலைக்குலைய வைப்பேன். இந்தியாவுக்கு எதிராக கடந்த சில போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளோம். அதனை மீண்டும் செய்வோம்” என்று தெரிவித்தார்.
இந்நிலையில் ட்ரெண்ட் போல்ட்டின் வார்த்தைகளுக்கு விராட் கோலி பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “கடினமான பவுலர்களுக்கு எதிராக தான் நாங்கள் பேட்டிங் செய்யப்போகிறோம் என்பது உண்மை தான். ஆனால் நாம் அன்றைய தினம் அவர்களை எப்படி எடுத்துக்கொள்கிறோம், எப்படி செயல்படுகிறோம் என்பதை பொறுத்துதான் இருக்கிறது.
Also Read: T20 World Cup 2021
ட்ரெண்ட் போல்ட், பாகிஸ்தான் வீரர் சாஹீன் அஃப்ரிடியை போன்று விளையாடுவேன் எனக்கூறியுள்ளார். ஆனால் நாங்கள் அந்த பவுலிங்கை எப்படி துவம்சம் செய்யலாம் என தயாராகி வருகிறோம். எங்களுக்கு எந்த அச்சமும் இல்லை. அதுபோன்ற பவுலிங்கிற்கு எதிராக நாங்கள் பல ஆண்டுகளாக சிறப்பாக விளையாடி வருகிறோம்” என கோலி பதிலடி கொடுத்துள்ளார்.