BGT 2024-25: விராட் கோலி தகர்க்கவுள்ள சில சாதனைகள்!
ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடர் எதிவரும் நவம்பர் 22 முதல் பெர்த்தில் தொடங்குகிறது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெறவுள்ள தொடரில், அனைவரது பார்வையும் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியின் பக்கம் திரும்பியுள்ளது.
ஏனெனில் சமீப காலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் மோசமான ஃபார்மில் இருந்து வரும் விராட் கோலி, இத்தொடரின் மூலம் தனது ஃபார்மை மீட்டெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், இந்த தொடரில் அவர் பேட்டிங் மூலம் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். அதன்படி நடப்பு பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் விராட் கோலி படைக்கவுள்ள சில சாதனைகளை இந்த பதிவில் பார்ப்போம்.
1. ஆஸ்திரேலியாவில் சச்சின் டெண்டுல்கரை முறியடித்து, டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற சாதனையை விராட் கோலி பெறும் வாய்ப்பை பெற்றுள்ளார். அதன்படி முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 1,809 டெஸ்ட் ரன்களை எடுத்துள்ளார். அதேசமயம் விராட் கோலி தற்போது 13 டெஸ்ட் போட்டிகளில் 54.08 சராசரியில் 1,352 ரன்கள் எடுத்துள்ளார். இதன்மூலம் இத்தொடரில் விராட் கோலி மேலும் 458 ரன்களைச் சேர்க்கும் பட்சத்தில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்து புதிய சாதனை படைக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
2. ஆஸ்திரேலியவில் அதிக டெஸ்ட் சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையையும் விராட் கோலி நெருங்கி வருகிரார். அவர் தற்போது தனது பெயரில் ஆறு சதங்கள் அடித்துள்ளார். இந்த பட்டியலில் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஜாக் ஹாப்ஸ் 9 சதங்களுடன் முதலிடத்திலும், வால்டர் ஹம்மண்ட் 7 சதங்களுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளனர். அந்தவகையில் விராட் கோலி மேற்கொண்டு 4 சதங்களை அடிக்கும் பட்சத்தில் ஆஸ்திரேலியாவில் அதிக சதங்களை அடித்த வீரர் எனும் சாதனையை படைப்பர் என்பது குறிப்பிடத்தக்கது.
3. இத்தொடரில் அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் நடைபெறும் டெஸ்ட் போட்டியில் விராட் கோலி 102 ரன்களைச் சேர்க்கும் பட்சத்தில், அந்த மைதானத்தில் அதிக டெஸ்ட் ரன்களை அடித்த முதல் வெளிநாட்டு வீரர் எனும் சாதனையை படைப்பார். இந்த பட்டியலில் தற்போது வரை வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஜாம்பவான் பிரையன் லாரா 4 போட்டிகளில் விளையாடி 2 சதம், 2 அரைசதங்களுடன் 610 ரன்களைக் குவித்து முதலிடத்தில் உள்ளார். அதேசமயம் விராட் கோலி 4 போட்டிகளில் 3 சதம், ஒரு அரைசதம் என 509 ரன்களைக் குவித்து நான்காம் இடத்தில் உள்ளார்.
Also Read: Funding To Save Test Cricket
4. நடப்பு பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் விராட் கோலி தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் விளையாடும் பட்சத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தனது 100ஆவது சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடுவார். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 100 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய இரண்டாவது இந்திய வீரர் எனும் சாதனையை விராட் கோலி படைப்பார். முன்னதாக இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 110 போட்டிகளில் விளையாடி முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.