ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனானது கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது. இத்தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி மூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தியுள்ளது. இதனையடுத்து அடுத்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடருக்கு தற்போதில் இருந்தே ஐபிஎல் அணிகள் பணிகளை மேற்கொண்டு பல்வேறு மாற்றங்களை செய்து வருகின்றனர்.
அந்தவகையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ஆஸ்திரேலிய அணியின் ஜாம்பவான்களில் ஒருவரான ரிக்கி பாண்டிங், கடந்த 2018ஆம் ஆண்டு முதல் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக அங்கும் வகித்து வந்த நிலையில் தற்போது பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.
ரிக்கி பாண்டிங்கின் பயிற்சிக்கு கீழ் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியானது 2020ஆம் ஆண்டு இறுதிப்போட்டி வரை முன்னேறியும், 2021ஆம் ஆண்டு பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியதைத் தவிர்த்து மற்ற சீசன்களில் பிளே ஆஃப் சுற்றுக்கு கூட முன்னேற முடியாமல் லீக் சுற்றுடனே வெளியேறது. அதிலும் குறிப்பாக கடந்த இரண்டு சீசன்களிலும் மோசமான ஆட்டத்தின் காரணமாக அந்த அணி பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை இழந்தது.
இந்நிலையில் தான் ரிக்கி பாண்டிங் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகியுள்ளார். இதனை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நிர்வாகமும் அதிகாரப்பூர்வமாக உறுதிசெய்துள்ளது. இதனைத் தொடர்ந்து டெல்லி அணியின் அடுத்த தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பு சௌரவ் கங்குலிக்கு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். இதனால் அடுத்த சீசனில் டெல்லி அணியின் பயிற்சியாளராக கங்குலி களமிறங்கவார் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளனர்.