விராட் கோலியின் பேட்டிங் ஃபார்ம் குறித்து எந்த கவலையும் இல்லை- ரிக்கி பாண்டிங்!
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஸ்திரேலிய அணி 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இதுவரை நடந்து முடிந்த மூன்று போட்டிகளில் இந்திய அணி இரண்டிலும், ஆஸ்திரேலிய அணி ஒரு போட்டியிலும் வெற்றிபெற்று 2-1 என்ற கணக்கில் தொடரில் நீடித்தி வருகிறது.
நடப்பு பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் டிராபியில் நடந்து முடிந்துள்ள மூன்று டெஸ்ட் போட்டிகளில் ஐந்து இன்னிங்ஸ்களில் விராட் கோலி 111 ரன்களை மட்டுமே எடுத்திருக்கிறார். அவரிடம் பேட்டிங்கில் எந்த தடுமாற்றத்தையும் பார்க்க முடியவில்லை. ஆனால் நிலையான பிறகு திடீரென்று தனது விக்கட்டை பறிகொடுக்கிறார். இது அவரது பேட்டிங் ஃபார்ம் குறித்து வெளியில் பல விமர்சனங்களை தற்பொழுது உருவாக்கி இருக்கிறது.
இது குறித்து பேசியுள்ள ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங், “விராட் கோலியை பொருத்தவரை நான் எப்பொழுதும் மீண்டும் மீண்டும் தொடர்ந்து சொல்வது, மிகத் திறமையான வீரர்களுக்கு அவர்கள் எப்படி திரும்பி வரவேண்டும் என்று தெரியும். அவர்கள் நிச்சயம் திரும்பி வருவார்கள். திரும்பி வருவதற்கான வழியை அவர்களே கண்டறிவார்கள்.
விராட் கோலியின் தற்போது ஏற்பட்டுள்ள இந்த நிலைமையில் இருந்து வெளியே வர வழியை கண்டுபிடிப்பார். எனக்கு அவரது பேட்டிங் ஃபார்ம் குறித்து எந்த கவலையும் இல்லை. நீங்கள் ஒரு பேட்மேனாக இருந்து ரன்கள் எடுக்க சிரமப்படுகிறீர்கள் என்றால், பிரச்சனை என்னவென்று நீங்களே அறிவீர்கள் அது உங்களுக்கு தெரியும். அவர் இதிலிருந்து மீண்டு வருவார் என்று நான் நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.