லார்ட்ஸ் டெஸ்ட்: ஜாம்பவான்களின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் ரிஷப் பந்த்!
India vs England Lord’s Test: லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவதன் மூலம் இந்திய வீரர் ரிஷப் பந்த் சில சாதனைகளைப் படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது போட்டி நாளை லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இத்தொடாரில் இதுவரை நடந்து முடிந்த இரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்ததுடன் 1-1 என்ற கணக்கில் தொடரை சமனிலும் வைத்துள்ளன. இதன் காரணமாக இப்போட்டியில் வெற்றிபெறும் அணி தொடரில் முன்னிலைப் பெறும்.
இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. மேலும் இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாகத் தயாராகியும் வருகின்றனர். இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணியின் துணைக்கேப்டனும், விக்கெட் கீப்பர் பேட்டருமான ரிஷப் பந்த் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் சர்வதேச டெஸ்டில் சில சாதானைகளைப் படைக்கும் வாய்ப்பையும் பெற்றுள்ளார்.
இந்தியாவுக்காக WTC-யில் அதிக ரன்கள்
அதன்படி இப்போட்டியில் ரிஷப் பந்த் மேற்கொண்டு 122 ரன்களைச் சேர்க்கும் பட்சத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அதிக ரன்களைக் குவித்த இந்திய வீரர் எனும் பெருமையைப் பெறுவார். முன்னதாக இந்த பட்டியலில் சமீபத்தில் சர்வதேச டெஸ்டில் இருந்து ஓய்வை அறிவித்த ரோஹித் சர்மா 2716 ரன்களுடன் முதலிடத்திலும், விராட் கோலி 2617 ரன்களுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளனர். ரிஷப் பந்த் 2594 ரன்களுடன் மூன்றாம் இடத்தில் உள்ளார்.
சேவாக்-ரோஹித்தின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ரிஷப் பந்த் இதுவரை 86 சிக்ஸர்களை அடித்துள்ளார். இந்நிலையில் அவர் மேலும் ஆறு சிக்ஸர்களை அடிக்கும் பட்சத்தில் இந்த வடிவத்தில் இந்தியாவுக்காக அதிக சிக்ஸர்களை அடித்த வீரர்களின் பட்டியலில் முதல் இடத்தை பிடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். தற்போது இந்தப் பட்டியலில் முன்னாள் வீரர்கள் வீரேந்தர் சேவாக் 91 சிக்ஸர்களை அடித்து முதலிடத்திலும், ரோஹித் சர்மா 88 சிக்ஸர்களுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.
Also Read: LIVE Cricket Score
நடப்பு இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ரிஷப் பந்த் அபாரமான ஃபார்மில் உள்ளார். அவர் லீஸ்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும் சதமடித்து அசத்தியுள்ளார். மேலும் பர்மிங்ஹாம் டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸிலும் அரைசதம் கடந்து மொத்தமாக 85 என்ற சராசரியுடன் 342 ரன்களைச் சேர்த்துள்ளார். மேலும் இதில் அவர் 13 சிக்ஸர்களையும் அடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.