T20 WC 2024: தோனி, கோலி வரிசையில் இணைந்த ரோஹித் சர்மா!

Updated: Thu, Jun 27 2024 23:08 IST
T20 WC 2024: தோனி, கோலி வரிசையில் இணைந்த ரோஹித் சர்மா! (Image Source: Google)

ஒன்பதாவது ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை எதிர்த்து இந்திய அணி பலபப்ரீட்சை நடத்தி வருகிறது. கயானாவில் மழை அச்சுறுத்தலுக்கு மத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியானது முதலில் பந்துவீச தீர்மானித்து இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். இதில் வழக்கம்போல் ரோஹித் சர்மா அதிரடியாக தொடங்க, மறுபக்கம் விராட் கோலியும் அதிரடியாக விளையாடும் முனைப்பில் சிக்ஸர் அடித்து ரன் கணக்கைத் தொடங்கினார். இதனால் இன்றைய போட்டியில் விராட் கோலி நிச்சயம் பெரிய ஸ்கோரை குவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால் சிக்ஸர் அடித்த அதே ஓவரில் மீண்டும் அடிக்க முயன்று க்ளீன் போல்டாகியதுடன் 9 ரன்களில் விக்கெட்டை இழந்து மீண்டும் ஏமாற்றமளித்துள்ளார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ரிஷப் பந்தும் வெறும் 4 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். இதன் காரணமாக இந்திய அணி 40 ரன்களில் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் ரோஹித் சர்மாவுடன் இணைந்த சூர்யகுமார் யாதவ் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 

இதன்மூலம் இந்திய அணி 8 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 65 ரன்களைச் சேர்த்திருந்தது. இந்நிலையில் மீண்டும் மழை குறுக்கிட்டதன் காரணமாக ஆட்டம் தடைப்பட்டுள்ளது. இதில் ரோஹித் சர்மா 37 ரன்களையும், சூர்யகுமார் யாதவ் 13 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து அணி தரப்பில் ரீஸ் டாப்லி மற்றும் சாம் கரண் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றியுள்ளனர். 

இந்நிலையில் இப்போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா 37 ரன்களைச் சேர்த்ததன் மூலம் புதிய மைல் கல் ஒன்றை எட்டியுள்ளார். அதன்படி சர்வதேச கிரிக்கெட்டில் கேப்டனாக 5000 ரன்களை (மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் சேர்த்து) கடந்த 5ஆவது இந்திய வீரர் எனும் பெருமையைப் பெற்றுள்ளார். இந்த பட்டியலில் முன்னாள் கேப்டன் விராட் கோலி 12,883 ரன்களுடன் முதலிடத்திலும், எம் எஸ் தோனி 11,207 ரன்களுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

இந்திய அணி கேப்டனாக சர்வதேச கிரிக்கெட்டில் 5,000 ரன்களுக்கு மேல் அடித்த வீரர்கள்

  • 12883 - விராட் கோலி
  • 11207 - எம்எஸ் தோனி
  • 8095 - முகமது அசாருதீன்
  • 7643 - சௌரவ் கங்குலி
  • 5013* - ரோஹித் சர்மா
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை