இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 உலகக்கோப்பை தொடரின் இரண்டாவது அரையிறுதிப்போட்டி நேற்று கயானாவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ரோஹித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவின் சிறப்பான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ரன்களைச் சேர்த்தது.

Advertisement

இதில் அதிகபட்சமாக ரோஹித் சர்மா 57 ரன்களையும், சூர்யகுமார் யாதவ் 47 ரன்களையும் சேர்த்தனர். இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் ஜோர்டன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணியானது அக்ஸர் படேல் மற்றும் குல்தீப் யாதவின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.

Advertisement

இதனால் அந்த அணி 16.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 103 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாகவே ஹாரி புரூக் 25 ரன்களைச் சேர்த்திருந்தார். இந்திய அணி தரப்பில் அக்ஸர் மற்றும் குல்தீப் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன்மூலம் இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியுள்ளது. 

இந்நிலையில் இப்போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதன்படி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் கேப்டனாக அதிக வெற்றிகளை பெற்ற வீரர் எனும் பாபர் ஆசாமின் சாதனையை ரோஹித் சர்மா முறியடித்து அசத்தியுள்ளார். முன்னதாக பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசாம் 85 போட்டிகளில் விளையாடி 48 வெற்றுகளைப் பதிவுசெய்ததே சாதனையாக இருந்தது.

இந்நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான வெற்றியின் மூலம் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா 61 போட்டிகளில் விளையாடி 49 வெற்றிகளை (சூப்பர் ஓவர்உள்பட) பதிவுசெய்து பாபர் ஆசாமின் சாதனையை முறியடித்து அசத்தியுள்ளார். இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் கேப்டனாக அதிக வெற்றிகளை பதிவுசெய்த வீரர் எனும் சாதனையை ரோஹித் சர்மா தன்வசப்படுத்தியுள்ளார். 

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளை பதிவுசெய்த கேப்டன்கள் (சூப்பர் ஓவர்கள் உள்பட)

  • 49 -ரோஹித் சர்மா (61 போட்டிகள்)
  • 48 -பாபர் ஆசம் (85 போட்டிகள்)
  • 45 -பிரையன் மசாபா (60 போட்டிகள்)
  • 44 -இயோன் மோர்கன் (72 போட்டிகள்)

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News