உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை படைத்த ரோஹித் சர்மா!
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் 47 ரன்கள் அடித்ததன் மூலம் உலகக்கோப்பை வரலாற்றில் ஒரே தொடரில் அதிக ரன் குவித்த கேப்டன் என்ற சாதனையை ரோஹித் சர்மா படைத்தார். முன்னதாக கேன் வில்லியம்சன் 2019 உலகக்கோப்பை தொடரில் 578 ரன்கள் குவித்து இருந்தார். அதை முறியடித்துள்ள ரோஹித் சர்மா இந்த உலகக்கோப்பை தொடரில் 597 ரன்கள் குவித்து இருக்கிறார்.
இதன் மூலம் ஒரே உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவித்த கேப்டன்கள் வரிசையில் முதல் இடத்தை பிடித்துள்ளார் ரோஹித் சர்மா. அடுத்து ஒட்டுமொத்த உலகக்கோப்பை தொடர்களில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் வரிசையில் இலங்கை ஜாம்பவான் குமார் சங்ககாராவை முந்தி நான்காம் இடத்தை பிடித்துள்ளார்.
மேலும், இன்றையப் போட்டியில் மூன்று சிக்ஸர்கள் அடித்ததன் மூலம் ஒருநாள் போட்டிகளில் புதிய சாதனை ஒன்றையும் அவர் படைத்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் ஓர் அணிக்கு எதிராக அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரராக ரோஹித் சர்மா மாறியுள்ளார். அவர் ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மட்டும் 86 சிக்ஸர்களை விளாசியுள்ளார்.
- ரோஹித் சர்மா - 86 சிக்ஸர்கள் - ஆஸ்திரேலியாவுக்கு எதிராக
- கிறிஸ் கெயில் - 85 சிக்ஸர்கள் - இங்கிலாந்துக்கு எதிராக
- ஷகித் அஃப்ரிடி - 63 சிக்ஸர்கள் - இலங்கைக்கு எதிராக
- சனத் ஜெயசூர்யா - 53 சிக்ஸர்கள் - பாகிஸ்தானுக்கு எதிராக