ஷுப்மன் கில் இன்னும் முதல் போட்டியில் இருந்து விலக்கப்படவில்லை - ரோஹித் சர்மா!
ஐசிசி உலகக்கோப்பை தொடரில் நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் லீக் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. மேலும் இந்திய அணி உலகக் கோப்பை தொடரில் தனது முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணியை சந்திக்கிறது. முதல் ஆட்டமே வலிமையான அணிக்கு எதிராக இந்திய அணிக்கு அமைந்திருக்கிறது.
இந்த முறை உலகக் கோப்பைத் தொடர் இந்தியாவில் நடைபெறுகின்ற காரணத்தினால் இந்தியாவுக்கு உள்நாட்டு சாதகம் என்கின்ற நல்ல விஷயம் இருந்தாலும், இதுவே உலகக் கோப்பையை வென்றே ஆக வேண்டிய அழுத்தத்தையும் நெருக்கடியையும் உருவாக்குகிறது. இந்த உலகக் கோப்பை தொடருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 15 பேர் கொண்ட இந்திய அணி, இந்திய சூழ்நிலைகளுக்கு மிகவும் சரியான ஒரு அணியாக இருக்கிறது.
அதே சமயத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள அனைத்து வீரர்களும் மிகச் சிறப்பான ஃபார்மில் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக இந்திய அணியின் நம்பிக்கை மிக அதிகமாக இருக்கிறது. கடைசி இரண்டு பயிற்சி போட்டிகள் மழையின் காரணமாக விளையாட முடியாவிட்டாலும் கூட, அதன் மூலம் நல்ல ஓய்வு கிடைத்தது நல்ல விஷயம் என்று கேப்டன் ரோகித் சர்மா கூறியிருந்தார்.
இன்று போட்டிக்கு முன்தினம் என்பதால் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்டனர். அப்போது பேசிய அவர், “ஷுப்மன் கில் விரைவில் குணமடைய வேண்டும் என்று விரும்புகிறேன். அவர் குணமடைய அனைத்து வாய்ப்பையும் வழங்குவோம். அவர் இன்னும் முதல் போட்டியில் இருந்து விலக்கப்படவில்லை. அவர் இளம் வீரர். நல்ல உடல் தகுதியுடன் இருப்பவர். அவர் விரைவில் குணமடைவார்.
ஒரு பேட்ஸ்மேன் ஆக என்னால் அணிக்கு என்ன சிறப்பாக செய்ய முடியும் என்பதில் நான் மிகுந்த கவனத்துடன் இருந்து வருகிறேன். அதேபோல அணிக்கு நல்ல துவக்கத்தை தொடர்ந்து தருவதில் நோக்கமாகக் கொண்டுள்ளேன். உலகக் கோப்பைக்கு இந்திய அணியை கேப்டனாக இருந்து வழிநடத்துவது மிகப்பெரிய கௌரவம் ஆகும். உலகக் கோப்பையை வெல்வது என்பது மிகவும் மகிழ்ச்சியான விஷயம். ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய அணி தங்கப் பதக்கத்தை வென்றது மிகவும் அருமையான ஒன்று” என்று கூறியுள்ளார்.