ரோஹித் சர்மா தனது தலைமை பண்மை காட்டியுள்ளார் - ஜஸ்பிரித் பும்ரா!
ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது. இப்போட்டிக்கான இந்திய அணியில் ரோஹித் சர்மா இடம்பிடிக்காததன் காரணமாக ஜஸ்பிரித் பும்ரா அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேசமயம் காயம் காரணமாக இத்தொடரில் இருந்து விலகிய ஆகாஷ் தீப்பிற்கு பதிலாக பிரஷித் கிருஷ்ணா பிளேயிங் லெவனில் வாய்ப்பு பெற்றுள்ளார். இதனையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். இதில் கேஎல் ராகுல் 4 ரன்களிலும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 10 ரன்னிலும் என விக்கெட்டை இழக்க, இந்திய அணி 17 ரன்களில் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அதன்பின் ஜோடி சேர்ந்த ஷுப்மன் கில் - விராட் கோலி ஆகியோர் ஓரளவு தாக்கு பிடித்து மூன்றாவது விக்கெட்டிற்கு 40 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அதன்பின் 20 ரன்களில் ஷுப்மன் கில் விக்கெட்டை இழக்க, 17 ரன்களை எடுத்த கையோடு விராட் கோலி மீண்டும் அவுட் சைட் ஆஃப் பந்தில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். இதனால் இந்திய அணி தற்போது வரை 4 விக்கெட் இழப்பிற்கு 76 ரன்களை மட்டுமே எடுத்து தடுமாறி வருகிறது.
இந்நிலையில் இப்போட்டியில் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தியதன் காரணமாக அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இப்போட்டியில் இருந்து தனக்கு தானே ஓய்வளித்துக்கொண்டார். இதனால் ஜஸ்பிரித் பும்ரா அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் இப்போட்டியின் டாஸ் நிகழ்வின் போது ரோஹித் சர்மா பிளேயிங் லெவனில் இடம்பெறாததற்கான காரணத்தை பும்ரா விளக்கினார்.
இதுகுறித்து பேசிய அவர், “எங்கள் கேப்டன் தனது தலைமையை வெளிப்படுத்தி ஓய்வெடுக்க முடிவு செய்துள்ளார். இது எங்கள் அணியில் உள்ள ஒற்றுமையை காட்டுகிறது. அணிகளில் எது சிறப்பாக இருந்தாலும் நாங்கள் அதைச் செய்ய விரும்புகிறோம். இந்தத் தொடரில் நாங்கள் சில நல்ல கிரிக்கெட்டை விளையாடியுள்ளோம். கடைசி போட்டி மிகவும் பரபரப்பாக இருக்கும். அதனால் இப்போட்டியில் சிறப்பாக செயல்படுவோம் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய பிளேயிங் லெவன்: உஸ்மான் கவாஜா, சாம் கொன்ஸ்டாஸ், மார்னஸ் லாபுஷாக்னே, ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், பியூ வெப்ஸ்டர், அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், நாதன் லையன், ஸ்காட் போலண்ட்.
Also Read: Funding To Save Test Cricket
இந்திய பிளேயிங் லெவன்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், ஷுப்மன் கில், விராட் கோலி, ரிஷப் பந்த், நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, பிரஷித் கிருஷ்ணா, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்..