விராட் கோலியின் கொண்டாட்டத்தை செய்து காட்டிய ரோகித் சர்மா; வைரலாகும் காணொளி!
ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்கள், வீராங்கனைகள், சிறந்த நடுவர்களுக்கு என்று பிசிசிஐ விருது வழங்கி கௌரவித்து வருகிறது. அதேபோல் ரஞ்சி கோப்பை, விஜய் ஹசாரே கோப்பை , கூச் பெஹார் கோப்பை என்று உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் சிறந்து விளங்கிய கிரிக்கெட் வீரர்களுக்கும் விருந்து வழங்கப்பட்டு வருகிறது. கடைசியாக கடந்த 2020 ஆம் ஆண்டு விருது வழங்கப்பட்டது.
அதன் பிறகு கரோனா தொற்றின் காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக பிசிசிஐ விருது வழங்கப்படவில்லை. இந்நிலையில் 2019 முதல் 2023ஆம் ஆண்டு வரையிலான விருதுகள் வழங்கும் விழா கடந்த 23ஆம் தேதி ஹைத்ராபாத்தில் நடைபெற்றது. இதில் 2023ஆம் ஆண்டின் சிறந்த வீரர் விருதை ஷுப்மன் கில் கைப்பற்றி அசத்தினார். மேலும் இந்திய அணியின் அஸ்வின், முகமது ஷமி, ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.
இந்நிலையில் இந்நிகழ்ச்சியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா உள்ளிட்ட வீரர்களும் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியின் போது ரோஹித் சர்மாவிடம் இந்திய கிரிக்கெட் வீரர்களின் கொண்டாட்டங்களை பிரதிபளிக்கும் வகையில் சையை செய்ய நிகழ்ச்சி தொகுப்பாளர் கேட்டுக்கொண்டார். அதன்படி இந்திய வீரர்கள் எம் எஸ் தோனி, விராட் கோலி மற்றும் ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோரது கொண்டாட்டங்களை ரோஹித் சர்மா செய்துகாட்டினார்.
இந்நிலையில் இக்காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. முன்னதாக இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தனிப்பட்ட காரணங்களால் இங்கிலாந்து அணிக்கெதிரான முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளிலிருந்து விலகியதுடன், பிசிசிஐ விருது வழங்கும் விழாவிலும் அவர் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.