ஷர்துல் தாக்கூர் குறித்த கேள்விக்கு நகைச்சுவையாக பதிலளித்த ரோஹித் சர்மா!

Updated: Tue, Feb 28 2023 21:59 IST
Image Source: Google

இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் நான்கு போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை இந்தூர் மைதானத்தில் நடைபெறுகிறது. முதலில் நாக்பூர் மற்றும் டெல்லியில் நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி சிறப்பான முறையில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிப்பதோடு, பார்டர் கவாஸ்கர் கோப்பையையும் தொடர்ந்து நான்காவது முறையாக தக்க வைத்தது. இந்த குறிப்பிட்ட டெஸ்ட் தொடரில் நான்காவது முறையாக கோப்பையை தக்க வைப்பது இதுதான் முதல் முறை.

நாளை மூன்றாவது டெஸ்ட் போட்டி தொடங்க உள்ள காரணத்தால் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பத்திரிக்கையாளர் சந்திப்பில் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்து பேசி இருந்தார். அதில் ஒரு கேள்வியாக இந்திய அணியின் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டராக கருதக்கூடிய வகையில் பேட்டிங் செய்யும் ஷர்துல் தாக்கூர் பற்றி கேள்வி முன் வைக்கப்பட்டது. இதற்கு ரோஹித் சர்மா தனக்கே உரிய நகைச்சுவை பாணியில் பதில் அளித்தார்.

இது குறித்து ரோஹித் சர்மா பேசும்பொழுது “மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வென்றால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான ஒத்திகையாக நான்காவது ஆட்டத்தை பயன்படுத்துவது சாத்தியம்தான். அதைப் பற்றி நாங்கள் பேசினோம். அதற்கான ஆட்களை நாங்கள் தயார் செய்ய வேண்டும். இதில் முக்கியமானவர் சர்துல் தாக்கூர். ஏனென்றால் அவர் நமக்கான திட்டங்களுக்குள் வருகிறார். அவர் எந்த அளவிற்கு தயாராகி இருக்கிறார் என்று எனக்குத் தெரியாது. ஆனால் நேற்றுதான் திருமணம் முடிந்தது என்று தெரியும். அவர் எவ்வளவு ஓவர் பந்து வீசி இருக்கிறார் மேலும் அதில் நாம் விரும்பும் ரிசல்ட் கிடைத்தால் அகமதாபாத்தில் வேறு ஏதாவது செய்ய நினைக்கலாம்” என்று கூறியிருக்கிறார்.

மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி குறித்து பேசி உள்ள ரோஹித் சர்மா, “முதலில் நாங்கள் மூன்றாவது டெஸ்ட் போட்டியை வெற்றிகரமாக கடக்க வேண்டும். இதனால் நாங்கள் அதிக தூரம் இந்தத் தொடரில் இருந்து முன்னோக்கிப் பார்க்க முடியாது. இந்த டெஸ்ட் தொடர் முடிந்த பிறகு நடுவில் ஐபிஎல் இரண்டு மாதங்கள் இருக்கிறது. எனவே எங்களுக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி குறித்து சிந்தித்து தயாராவதற்கு நிறைய காலம் இருக்கிறது. தற்பொழுது இந்த ஆட்டத்தில் கவனம் செலுத்தி வெற்றி பெறுவதே எங்களுக்கு முக்கியமானதாகும்.

இந்த இரண்டு ஆண்டுகளில் இங்கிலாந்தில் நாங்கள் குறிப்பிட்ட அளவு விளையாடியிருக்கிறோம் அதேபோல் ஆஸ்திரேலியா அணியும் விளையாடியிருக்கிறது. இங்கிலாந்து அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி வரும் என்று நான் நினைக்கவில்லை. அதே சமயத்தில் இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் போட்டியில் இருக்கின்றன. இறுதிப்போட்டி இங்கிலாந்து ஓவலில் நடைபெறுவதால் எங்கள் யாருக்கும் சொந்த மைதான மற்றும் நிலைமைகளின் சாதகங்கள் இருக்காது. இது மிகவும் சவாலான ஒரு போட்டியாக அமையும்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை