டி20 கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய ரோஹித் சர்மா!

Updated: Thu, Apr 24 2025 12:41 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் சன்ரைசர்ச் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. 

இந்த வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் 5ஆவது வெற்றியைப் பெற்றதுடன் 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலின் மூன்றாம் இடத்திற்கும் முன்னேறி அசத்தியுள்ளது. இப்போட்டியில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய டிரென்ட் போல்ட் ஆட்ட்நாயகன் விருதை வென்றார். இந்நிலையில் இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா சிறப்பு சாதனைகளை படைத்துள்ளார். 

அதன்படி இப்போட்டியில் ரோஹித் சர்மா அரைசதம் கடந்ததன் மூலம் டி20 கிரிக்கெட்டில் தனது 12000 ரன்களை நிறைவு செய்தார். இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் 12000 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை எடுத்த உலகின் எட்டாவது வீரர் மற்றும் இரண்டாவது இந்திய வீரர் எனும் பெருமையைப் பெற்றுள்ளார். இதற்கு முன்னர் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி மட்டுமே டி20 கிரிக்கெட்டில் 12000 ரன்களைக் கந்துள்ளார். 

அதேசமயம் உலகளவில் கிறிஸ் கெய்ல், அலெக்ஸ் ஹேல்ஸ், கீரோன் பொல்லார்ட், சோயிப் மாலிக், விராட் கோலி, டேவிட் வார்னர் மற்றும் ஜோஸ் பட்லர் மட்டுமே இந்த சாதனையை படைத்திருந்தனர். இது தவிர, ரோஹித் ஒரு இந்தியராக மிகக் குறைந்த பந்துகளில் 12000 டி20 ரன்கள் எடுத்த வீரர் எனும் சாதனையையும் படைத்தார். அதன்படி ரோஹித் சர்மா 8885 பந்துகளில் இந்த சாதனையை படைத்தார், அதே நேரத்தில் விராட் கோலி 8997 பந்துகளில் இந்த மைல் கல்லை எட்டியது குறிப்பிடத்தக்கது. 

டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 12000 ரன்களை எட்டிய வீர்ர்கள் (இன்னிங்ஸ்)

  • 343 இன்னிங்ஸ்- கிறிஸ் கெய்ல்
  • 360 இன்னிங்ஸ்- விராட் கோலி
  • 368 இன்னிங்ஸ்- டேவிட் வார்னர்
  • 405 இன்னிங்ஸ்- ஜோஸ் பட்லர்
  • 432 இன்னிங்ஸ்- அலெக்ஸ் ஹேல்ஸ்
  • 443 இன்னிங்ஸ்- ரோஹித் சர்மா*
  • 451 இன்னிங்ஸ்- ஷோயப் மாலிக்
  • 550 இன்னிங்ஸ்- கீரோன் பொல்லார்ட்

இப்போட்டி குறித்து பேசினால், டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் அதிரடியாக விளையாடிய ஹென்ரிச் கிளாசென் 71 ரன்களையும், அபினவ் மனோகர் 43 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறியதால், அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்களை மட்டுமே சேர்த்தது. மும்பை அணி தரப்பில் டிரென்ட் போல்ட் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். 

Also Read: LIVE Cricket Score

அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியில் ரிக்கெல்டன் 11 ரன்னிலும், ஜேக்ஸ் 22 ரன்னிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அதேசமயம் அனுபவ வீரர்கள் ரோஹித் சர்மா 70 ரன்களையும், சூர்யகுமார் யாதவ் 40 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தனர். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணியானது 15.4 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை