ஐபிஎல் 2023:இது வெறும் முதல் போட்டி தான் - ரோஹித் சர்மா!
ஐபிஎல் தொடரின் ஐந்தாவது ஐந்தாவது லீக் ஆட்டத்தில் பெங்களூர் அணியிடம் மும்பை அணி படுதோல்வியை தழுவியது. இதன் மூலம் தொடர்ந்து 11-வது முறையாக மும்பை அணி தங்களது முதல் லீக் ஆட்டத்தில் தோல்வியை தழுவி இருக்கிறது. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணியில் திலக் வர்மாவின் அதிரடி ஆட்டத்தால் 171 ரன்கள் எடுத்தது.
இந்த இலக்கை ஆர்சிபி அணி 16 புள்ளி இரண்டாவது ஓவரிலேயே வெறும் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி பெற்றது. ஆர்சிபி தரப்பில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கோலி 82 ரன்களையும், கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் 73 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர்.
இந்நிலையில் போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய கேப்டன் ரோஹித் சர்மா, “பேட்டிங்கில் முதல் ஆறு ஓவர்களில் நாங்கள் சிறப்பான தொடக்கத்தை எட்ட முடியவில்லை. எனினும் திலக் வர்மா மற்றும் சில பேட்ஸ்மேன்கள் பேட்டிங்கில் முக்கிய பங்காற்றி இருக்கிறார்கள். இதே போன்று பந்துவீச்சிலும் நாங்கள் சரியாக செயல்படவில்லை. இந்த ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமானது. இதனை பயன்படுத்திக் கொண்டு திலக் வர்மா அதிரடியாக விளையாடி இருக்கிறார்.
நிச்சயமாக அவர் திறமை வாய்ந்த வீரர். திலக் ஆடிய சில சாட்கள் எல்லாம் விளையாட நிறைய தைரியம் வேண்டும். திலக் வர்மாவின் இந்த அதிரடியால் நாங்கள் சவாலான இலக்கை எட்டினோம். அதற்கு திலக் வர்மாவுக்கு பாராட்டுக்கள். இந்த ஆடுகளத்தில் விளையாடும் போது எந்த இலக்கை நிர்ணயிக்க வேண்டும் என்பது குறித்து நாங்கள் யோசிக்கவில்லை.
நாங்கள் பேட்டிங்கில் முழு திறனை வெளிப்படுத்தாமலேயே 171 ரன்கள் எட்டி விட்டோம். இன்னும் ஒரு 30, 40 ரன்கள் அடித்து இருந்தால் நிச்சயமாக போட்டி சவாலாக மாறி இருக்கும். நான் கடந்த ஆறு முதல் எட்டு மாதங்களாக பும்ரா இல்லாமல் பழகி விட்டேன். எனினும் இது முற்றிலும் வேறு அணி. இதனால் வீரர்கள் யாரேனும் பொறுப்பை அணிக்காக எடுத்து கொள்ள முன் வர வேண்டும்.
காயங்கள் எப்போதும் ஏற்படுவது உண்டு. அதனை நாம் கட்டுப்படுத்த முடியாது. காயம் அடைந்த வீரர் குறித்து கவலைப்படாமல் அடுத்தது என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்க வேண்டும். எங்கள் அணியில் நிறைய இளைஞர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பை கொடுப்போம். இது வெறும் முதல் போட்டி தான். இன்னும் நிறைய போட்டிகள் இருக்கிறது. அதனை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.