ENG vs IND, 5th Test: ரூட், பேர்ஸ்டோவ் அபார சதம்; தொடரை சமன் செய்தது இங்கிலாந்து!

Updated: Tue, Jul 05 2022 16:44 IST
Root & Bairstow Power England To A 7-Wicket Thrashing Against India; Draw Test Series 2-2 (Image Source: Google)

பர்மிங்ஹாம் நகரில் இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா பங்கேற்று வரும் 5ஆவது டெஸ்ட் போட்டி இறுதி நாளை எட்டியுள்ளது. 2 – 1* என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கும் இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி போட்டி கடந்த ஜூலை 1ஆம் தேதியன்று துவங்கியது. 

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் போராடி 416 ரன்கள் சேர்த்தது. கில், புஜாரா, விராட் கோலி உட்பட முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டானதால் 98/5 என திண்டாடிய இந்தியாவுக்கு 222 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அதிரடியாக விளையாடிய ரிஷப் பண்ட் சதமடித்து 146 ரன்களும் ரவீந்திர ஜடேஜா சதமடித்து 104 ரன்களும் குவித்தனர்.

கடைசி நேரத்தில் ஸ்டுவர்ட் ப்ராட் வீசிய ஒரே ஓவரில் கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா 35 ரன்களை பறக்கவிட்டு உலக சாதனை படைத்தார். இங்கிலாந்து சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக ஜேம்ஸ் ஆண்டர்சன் 5 விக்கெட்டுகளை எடுத்தார். அதை தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து இந்திய பவுலர்களின் தரமான பந்துவீச்சில் வெறும் 284 ரன்களுக்கு சுருண்டது. 

கேப்டன் பென் ஸ்டோக்ஸ், ஜோ ரூட் உட்பட முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றிய அந்த அணிக்கு அதிகபட்சமாக ஜானி பேர்ஸ்டோ சதமடித்து 106 ரன்கள் குவித்தார். இந்தியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 4 விக்கெட்டுகள் எடுத்தார்.

அதனால் 132 ரன்கள் முன்னிலை பெற்ற இந்தியா 400 க்கும் மேற்பட்ட ரன்களை இலக்காக நிர்ணயிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 2-வது இன்னிங்சில் சுமாராக பேட்டிங் செய்து 245 ரன்களுக்கு ஆல்-அவுட்டாகி சொதப்பியது. கில், விஹாரி, விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயர் உள்ளிட்ட முக்கிய பேட்ஸ்மேன்கள் மீண்டும் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றிய நிலையில் அதிகபட்சமாக புஜாரா 66 ரன்களும் ரிஷப் பண்ட் 57 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 4 விக்கெட்டுகளை எடுத்தார்.

இறுதியில் 378 என்ற துரத்திய இங்கிலாந்து ஒரு கட்டத்தில் தொடக்க வீரர்களின் அதிரடியால் 100/0 என்ற வலுவான தொடக்கத்தை பெற்று அச்சுறுத்தியது. அப்போது அலெஸ் லீஸ் 56, ஜாக் கிராவ்லி 46, ஓலி போப் 0 என டாப் ஆர்டரை அடுத்தடுத்து காலி செய்த இந்தியா வெற்றிக்காக போராடியது. ஆனாலும் பின்னர் வந்த ஜோ ரூட் 76* ரன்களும் ஜானி பேர்ஸ்டோ 72* ரன்களும் எடுத்து நங்கூரமாக விளையாடி 4ஆவது நாள் ஆட்டத்தை முடித்தனர்.

அதன்பின் இன்று தொடங்கிய கடைசி நாள் ஆட்டத்தில் 119 ரன்கள் எடுத்தல் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தியது. இதில் இருவரும் சதமடித்ததுடன், அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். 

இதன்மூலம் இங்கிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியதுடன், 2-2 என்ற காணக்கில் டெஸ்ட் தொடரையும் சமன் செய்து சாதனைப் படைத்தது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை