இங்கிலாந்தில் நடத்தப்படும் டி20 லீக் தொடரான டி20 பிளாஸ்ட் தொடரின் நடப்பாண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற முதல் காலிறுதிச்சுற்று ஆட்டத்தில் சர்ரே மற்றும் டர்ஹாம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற சர்ரே அணி முதலில் பந்துவீசுவதாக அறிவிக்க, அதன்படி களமிறங்கிட டர்ஹாம் அணியில் மைக்கேல் ஜோன்ஸ், ஆஷ்டன் டர்னர், பாஸ் டி லீட் ஆகியோரைத் தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். 

Advertisement

இதனால் டர்ஹாம் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதில் அதிகபட்சமாக இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மைக்கேல் ஜோன்ஸ் 37 ரன்களையும், ஆஷ்டன் டர்னர் 26 ரன்களையும், பாஸ் டி லீட் 24 ரன்களையும் சேர்த்தனர். சர்ரே அணி தரப்பில் டேனியல் வோரல், ரீஸ் டாப்லி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், சாம் கரண், டாம் கரன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். 

Advertisement

இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய சர்ரே அணியிலும் டாப் ஆர்டர் வீரர்கள் வில் ஜேக்ஸ், லௌரி எவான்ஸ், ரோரி பர்ன்ஸ் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். பின்னர் இணைந்த டோமினிக் சிப்லி மற்றும் சாம் கரண் இணை அதிரடியாக விளையாடி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். இதில் தொடர்ந்து அபாரமாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர். 

பின்னர் 67 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டோமினிக் சிப்லியும், 52 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் சாம் கரணும் ஆட்டமிழந்தாலும், சர்ரே அணி 18 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் டர்ஹாம் அணியை வீத்தி அரையிறுதிச்சுற்றுக்கும் முன்னேறி அசத்தியது. இப்போட்டியில் அரைசதம் கடந்து அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த டோமினிக் சிப்லி ஆட்டநாயகன் விருதை வென்றார். 

இந்நிலையில் இப்போட்டியில் சர்ரே அணியின் விக்கெட் கீப்பர் ரோரி பர்ன்ஸ் எளிதான ரன் அவுட் ஒன்றை தவறவிட்டுள்ள நிகழ்வு ரசிகர்கள் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.  அதன்படி இன்னிங்ஸின் 15ஆவது ஓவரில் ரோரி பர்ன்ஸின் இந்த தவறானது காணப்பட்டது. டாம் கரன் வீசிய வைட் யார்க்கர் பந்தை பாஸ் டி லீக் கவர் திசையில் அடித்துவிட்டு ரன் ஓட முயற்சித்தார். அப்போது அத்தில் ஃபீல்டிங் செய்து கொண்டிருந்து வில் ஜேக்ஸ் அற்புதமாக பந்தை தடுத்து நிறுத்தினார். 

 

Advertisement

இதனால் பேட்டர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் பாதி களத்தில் நிற்க, வில் ஜேக்ஸ் பந்தை விக்கெட் கீப்பர் ரோரி பர்ன்ஸிடம் த்ரோ அடித்தார். ஆனால் பந்தை சரியாக பிடிக்க தவறிய நிலையில், தனது கைகளால் மட்டுமே ஸ்டம்பினை தகர்த்தார். பிறகு அவர் தனது தவறை உணர்ந்து நிலைமையை சரிசெய்ய முயற்சித்த நேரத்தில், ஜோன்ஸ் பாதுகாப்பாக தனது கிரீஸிற்கு திரும்பினார். இந்நிலையில் ரோரி பர்ன்ஸ் தவறவிட்ட இந்த ரன் அவுட் குறித்த காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News