தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு டி20 போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்று, 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று டர்பனில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு ரீஸா ஹென்றிக்ஸ் - டெம்பா பவுமா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் டெம்பா பவுமா ரன்கள் ஏதுமின்றியும், அடுத்து களமிறங்கிய மேத்யூ ப்ரீட்ஸ்கி 5 ரன்களிலும் என அடுத்தடுத்து மார்கஸ் ஸ்டொய்னிஸ் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்து பெவிலியனுக்கு திரும்பினர். அதன்பின் ஹென்றிக்ஸுடன் இணைந்த கேப்டன் ஐடன் மார்க்ரம் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

Advertisement

தொடர்ந்து பவுண்டரியும் சிக்சர்களுமாக விளாசிய மார்க்ரம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்கப்பட்ட நிலையில் 4 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 41 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மறுபக்கம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரீஸா ஹென்றிக்ஸும் 42 ரன்களுக்கு விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.  இதையடுத்து களமிறங்கிய டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 25 ரன்களிலும், பிஜொர்ன் ரன்கள் ஏதுமின்றியும், ஜெரால்ட் கோட்ஸி 13 ரன்களுக்கும் என அடுத்தடுத்து வந்த வேகத்திலேயே விக்கெட்டை இழந்தனர்.

அதேசமயம் இப்போட்டியில் 6ஆவது வரிசையில் களமிறங்கிய டொனாவன் ஃபெரீரா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 5 சிக்சர்கள், ஒரு பவுண்டரி என 48 ரன்களில் ஆட்டமிழந்து தனது அரைசதத்தை தவறவிட்டார். இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 8 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்களைக் குவித்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய சீன் அபேட் 4 விக்கெட்டுகளையும், மார்கஸ் ஸ்டொய்னிஸ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியளிக்கும் வகையில் தொடக்க வீரர் மேத்யூ ஷார்ட் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் வழக்கம்போல் அதிரடியாக தொடங்கிய கேப்டன் மிட்செல் மார்ஷ் இப்போட்டியில் 15 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். 

பின்னர் ஜோடி சேர்ந்த டிராவிஸ் ஹெட் - ஜோஷ் இங்கிலிஸ் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன், அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். இதில் அதிரடியாக விளையாடிவந்த டிராவிஸ் ஹெட் அரைசதம் கடக்க, மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜோஷ் இங்க்லிஸ் 42 ரன்களுக்கு ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 

Advertisement

இதனையடுத்து களமிறங்கிய மார்கஸ் ஸ்டொய்னிஸ் வழக்கம்போல் தனது அதிரடியை காட்டத்தொடங்கினார். இதனால் ஆஸ்திரேலிய அணியின் வெற்றியும் எளிதானது. இறுதியில் 6 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஆஸ்திரேலிய அணி இருந்த நிலையில், டிராவிஸ் ஹெட் 91 ரன்களிலும், அவரைத்தொடர்ந்து வந்த டிம் டேவிட் ஒரு ரன்னிலும் என அடுத்தடுத்து தேவையின்றி விக்கெட்டுகளை இழந்தனர். 

இருப்பினும் இறுதிவரை களத்திலிருந்த மார்கஸ் ஸ்டொய்னிஸ் 2 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 37 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 17.5 ஓவர்களில் இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி தென் ஆப்பிரிக்க அணியை அதன் சொந்த மண்ணிலேயே ஒயிட்வாஷ் செய்தும் அசத்தியுள்ளது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News