தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி தென் ஆப்பிரிக்கா - இந்திய அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டியானது இன்று (நவம்பர் 08) டர்பனில் உள்ள கிங்ஸ்மீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. 

Advertisement

இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் கடந்த போட்டியில் சதமடித்த கையோடு இப்போட்டியில் விளையாடிய சஞ்சு சாம்சன் அதே ஃபார்மை தொடர்ந்து பவுண்டரிகளை விளாசினார். அதேசமயம் மற்றொரு தொடக்க வீரரான அபிஷேக் சர்மா 7 ரன்களுடன் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளிக்க, மறுமுனையில் அதிரடியாக விளையாடிய சஞ்சு சாம்சன் 27 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். 

Advertisement

பின்னர் சாம்சனுடன் இணைந்த கேப்டன் சூர்யகுமார் யாதவும் பவுண்டரிகளை பறக்கவிட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்த்தொடங்கியது. இருவரும் தொடர்ந்து அதிரடியாக விளையாட இருவரது பார்ட்னர்ஷிப்பும் 50 ரன்களைக் கடந்தது. அதன்பின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார் யாதவ் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 21 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய திலக் வர்மாவும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் உயரத்தொடங்கியது. அதேசமயம் மறுபக்கம் சிக்ஸர்களாக பறக்கவிட்ட சஞ்சு சாம்சன் 47 பந்துகளில் தனது இரண்டாவது சர்வதேச டி20 சதத்தைப் பதிவுசெய்தார். 

இதன்மூலம் அடுத்தடுத்த சர்வதேச டி20 போட்டிகளில் போட்டிகளில் சதமடித்து அசத்திய முதல் இந்திய வீரர் எனும் சாதனையையும் அவர் படைத்தார். மறுபக்கம் அரைசதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட திலக் வர்மா 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 33 ரன்களில் விக்கெட்டை இழக்க, அபாரமாக விளையாடிய சஞ்சு சாம்சன் 7 பவுண்டரி, 10 சிக்ஸர்கள் என 107 ரன்களைக் குவித்த கையோடு ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து அணியின் ஃபினிஷர் ஹர்திக் பாண்டியா 2 ரன்களுக்கும், ரிங்கு சிங் 11 ரன்களையும் மட்டுமே எடுத்த நிலையில் தனது விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். 

இறுதியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அக்ஸர் படேல் 7 ரன்களில் நடையைக் கட்ட, இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்களைச் சேர்த்தது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜெரால்ட் கோட்ஸி 3 விக்கெட்டுகளையும், மார்கோ ஜான்சென், கேசவ் மஹாராஜ், பேட்ரிக் குரூகர் மற்றும் பீட்டர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இதனையடுத்து 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்க அணியானது பேட்டிங் செய்யவுள்ளது. 

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News