SA vs IND, 1st Test: விராட் கோலி போராட்டம் வீண்; தென் ஆப்பிரிக்காவிடம் இன்னிங்ஸ் தோல்வியைச் சந்தித்தது இந்தியா!

Updated: Thu, Dec 28 2023 20:47 IST
Image Source: Google

தென் ஆப்பிரிக்கா - இந்திய அணிகளுக்கு இடையேயான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நடைபெற்றது. இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி இரண்டாம் நாள் உணவு இடைவேளைக்கு முன்னதாகவே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 245 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி தரப்பில் கேஎல் ராகுல் 123 ரன்களைச் சேர்த்தார். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய காகிசோ ரபாடா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இதையடுத்து தனது இன்னிங்ஸை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா, எய்டன் மாா்க்ரமை 1 பவுண்டரியுடன் 5 ரன்களுக்கு இழந்தது. சிராஜ் வீசிய 4-ஆவது ஓவரில் அவா் ராகுலிடம் கேட்ச் கொடுத்தாா். அடுத்து வந்த டோனி டி ஸோர்ஸி நிதானமாக விளையாடினார். டீன் எல்கா் - ஸோர்ஸி பாா்ட்னா்ஷிப் 2ஆவது விக்கெட்டுக்கு 93 ரன்கள் சோ்த்தனர். 

அதன்பின் 28 ரன்கள் எடுத்த ஸோர்ஸி விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கீகன் பீட்டா்சனை 2 ரன்களுக்கு பெவிலியன் திரும்பச் செய்தாா் பும்ரா. அதேசமயம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய டீன் எல்கர் தனது சதத்தைப் பதிவுசெய்தார். அதேசமயம் மறுபக்கம் களமிறங்கிய அறிமுக வீரர் டேவிட் பெடிங்ஹாம் 7 பவுண்டரி, 2 சிச்கர்கள் என 56 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். 

இதனால் தென் ஆப்பிரிக்க அணி 256 ரன்கள் எடுத்த நிலையில் இரண்டாம் நாள் ஆட்டம் முடிவடைந்தது. இதையடுத்து இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தை டீன் எல்கா் 140 ரன்களுடனும், மாா்கோ ஜான்சென் 3 ரன்களுடன் தொடங்கினர். இதில் அதிரடியாக விளையாடிய ஜான்சென் தனது இரண்டாவது அரைசதத்தைப் பதிவுசெய்தார். அதேசமயம் மறுபக்கம் இரட்டை சதத்தை நெருங்கிய டீன் எல்கர் 185 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். 

அதன்பின் களமிறங்கிய காகிசோ ரபாடா ஒரு ரன்னிலும், நந்த்ரே பர்கர் ரன்கள் ஏதுமின்றியும் என பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். அதன்பின் தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் டெம்பா பவுமா காயம் காரணமாக பேட்டிங் செய்ய வராததால் தென் ஆப்பிரிக்க அணி 408 ரன்களில் ஆல் அவுட்டானதாக அறிவிக்கப்பட்டது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மார்கோ ஜான்சென் 11 பவுண்டரி, ஒரு சிக்சர் என 84 ரன்களைச் சேர்த்தார். இந்திய அணி தரப்பில் ஜஸ்ப்ரித் பும்ரா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இதையடுத்து 163 ரன்கள் பின் தங்கிய நிலையில் இந்திய தங்களுடைய இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா ரன்கள் ஏதுமின்றி டக் அவுட்டாக, மற்றொரு தொடக்க வீரர் யஷஸ்வி ஜெஸ்ய்வால் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த ஷுப்மன் கில் - விராட் கோலி இணை அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

பின் 6 பவுண்டரிகளுடன் 26 ரன்களை எடுத்திருந்த ஷுப்மன் கில்லின் விக்கெட்டை மார்கோ ஜான்சென் யார்க்கர் மூலம் கைப்பற்றினார். இதையடுத்து விராட் கோலி ஒருமுனையில் ரன் குவிப்பில் ஈடுபட மறுபக்கம் களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் 6 ரன்களிலும், கேஎல் ராகுல் 4 ரன்களிலும், ரவிச்சந்திரன் அஸ்வின் ரன்கள் ஏதுமின்றியும், ஷர்துல் தாக்கூர் 2 ரன்களிலும் என விக்கெட்டை இழந்து நடையைக் கட்டினர். 

அதேசமயம் சிறப்பாக விளையாடி வந்த விராட் கோலி தனது அரைசதத்தைப் பதிவுசெய்து போராடினார். ஆனால் மறுபக்கம் ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, 12 பவுண்டரி, ஒரு சிக்சர் என 76 ரன்களைச் சேர்த்திருந்த விராட் கோலியும் விக்கெட்டை இழந்தார். இதனால் இந்திய அணி 131 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. 

தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய நந்த்ரே பர்கர் 4 விக்கெட்டுகளையும், மார்கோ ஜான்சென் 3 விக்கெட்டுகளையும், காகிசோ ரபாடா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை