SA vs PAK, 1st ODI: சதத்தை தவறவிட்ட கிளாசென்; சவாலான இலக்கை நிர்ணயித்தது தென் ஆப்பிரிக்கா!

Updated: Tue, Dec 17 2024 21:05 IST
Image Source: Google

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துவரும் பாகிஸ்தான் அணி தற்சமயம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டியானது பார்லில் உள்ள போலண்ட் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் ஐடன் மார்க்ரம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். 

இதனையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு டோனி டி ஸோர்ஸி மற்றும் ரியான் ரிக்கெல்டன் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணிக்கு தேவையான அடித்தளத்தையும் அமைத்து கொடுத்தனர். இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 70 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். அதன்பின் 33 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டோனி டி ஸோர்ஸியும், 36 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரியான் ரிக்கெல்டனும் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பினை தவறவிட்டனர்.

பின்னர் களமிறங்கிய ரஸ்ஸி வேண்டர் டுசென் 8 ரன்களுக்கும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஒரு ரன்னிலும் ஆட்டமிழக்க, தென் ஆப்பிரிக்க அணி 88 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனையடுத்து இணைந்த கேப்டன் ஐடன் மார்க்ரம் மற்றும் ஹென்ரிச் கிளாசென் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தியதுடன், அணியின் ஸ்கோரையும் உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் ஹென்ரிச் கிளாசென் தனது அரைசதத்தையும் பதிவுசெய்தார். அதேசமயம் மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மார்க்ரம் 35 ரன்னில் ஆட்டமிழந்தார். 

Also Read: Funding To Save Test Cricket

இதனைத்தொடர்ந்து களமிறங்கிய மார்கோ ஜான்சென் 10 ரன்களிலும், ஆண்டில் பெஹ்லுக்வாயோ ஒரு ரன்னிலும் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் சதத்தை நெருங்கிய ஹென்ரிச் கிளாசென் 7 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 84 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் பார்ட்மேன் 10 ரன்களையும், ரபாடா 11 ரன்களையும் சேர்க்க தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 239 ரன்களைச் சேர்த்துள்ளது. பாகிஸ்தான் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய சல்மான் அலி அகா 4 விக்கெட்டுகளையும், அப்ரார் அஹ்மத் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை