SA vs PAK: காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகினார் சைம் அயூப்!
தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று (ஜனவரி 03) கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து பாகிஸ்தான் அணியை பந்துவீச அழைத்தார்.
இதனையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் தொடக்க வீரர் ரியான் ரிக்கெல்டன் ஒருபக்கம் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். அதேசமயம் மறுமுனையில் ஐடன் மார்க்ரம் 17 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வியான் முல்டர் 5 ரன்களுக்கும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் தென் ஆப்பிரிக்க அணி 72 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்தது.
அதன்பின் ரியான் ரிக்கெல்டனுடன் இணைந்துள்ள கேப்டன் டெம்பா பவுமா அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரியான் ரிக்கெல்டன் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது இரண்டாவது சதத்தையும் மறுபக்கம் கேப்டன் டெம்பா பவுமா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 4ஆவது சதத்தையும் பதிவுசெய்தனர். அதன்பின் 106 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டெம்பா பவுமா தனது விக்கெட்டை இழந்தார்.
தென் ஆப்பிரிக்க அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 316 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ள ரியான் ரிக்கெல்டன் 21 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 176 ரன்களுடனும், டேவிட் பெட்டிங்ஹாம் 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்நிலையில் இப்போட்டியின் போது பாகிஸ்தான் அணியின் இளம் வீரர் சைம் அயூம் ஃபீல்டிங்கின் போது காயமடைந்து களத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறினார்.
அதன்படி இன்னிங்ஸின் 7ஆவது ஓவரின் போது ரியான் ரிக்கெல்டன் அடித்த பந்தை தடுக்கும் முயற்சின் போது அவர் தனது காலில் பலத்த காயத்தை சந்தித்தார். அதன்பின் அவர் ஸ்ட்ரெச்சரில் மைதானத்திற்கு வெளியே அழைத்துச் செல்லப்பட்டார். இதையடுத்து அவர் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு ஸ்கேன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் அவரது காயம் தீவிரமடைந்ததை தொடர்ந்து இப்போட்டியில் இருந்து சைம் அயூப் விலகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு அவரின் மருத்துவ பரிசோதனை முடிவுகளை லண்டனில் உள்ள சிறப்பு மருத்துவருக்கு அனுப்பியுள்ளதாகவும், இதனால் அவர் சில மாதங்கள் கிரிக்கெட்டில் விளையாட முடியாத சூழல் ஏற்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் எதிர்வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரிலும் அவர் பங்கேற்கபாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
தென் ஆப்பிரிக்கா பிளேயிங் லெவன்: ஐடன் மார்க்ரம், ரியான் ரிக்கெல்டன், வியான் முல்டர், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டெம்பா பவுமா(கே), டேவிட் பெட்டிங்ஹாம், கைல் வெர்ரைன், மார்கோ ஜான்சன், கேசவ் மஹாராஜ், ககிசோ ரபாடா, குவேனா மபாகா
Also Read: Funding To Save Test Cricket
பாகிஸ்தான் பிளேயிங் லெவன்: ஷான் மசூத்(கே), சைம் அயூப், பாபர் ஆசாம், கம்ரான் குலாம், சௌத் ஷகீல், முகமது ரிஸ்வான், சல்மான் ஆகா, அமீர் ஜமால், மிர் ஹம்சா, குர்ரம் ஷஷாத், முகமது அப்பாஸ்.